திருவாடானை தாலுகாவில் 6000 குடும்ப அட்டைகளுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தம்


திருவாடானை தாலுகாவில் 6000 குடும்ப அட்டைகளுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-07T18:32:34+05:30)

திருவாடானை தாலுகாவில் சுமார் 6000 குடும்ப அட்டைகளுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆதார் எண் குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரே‌ஷன் கடைகளில

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் சுமார் 6000 குடும்ப அட்டைகளுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆதார் எண்

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரே‌ஷன் கடைகளில் தங்களது ஆதார் எண்னை குடும்ப அட்டைகளில் இணைத்து வருகின்றனர். அவ்வாறு குடும்ப அட்டைகளில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு அரசி, சீனி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திருவாடானை தாலுகாவில் உள்ள 141 ரே‌ஷன் கடைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 6,000 குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் எண் இணைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையொட்டி ஆதார் எண் இணைக்காத அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இம்மாதம் ரே‌ஷன் பொருட்களை பெறமுடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இதுகுறித்து தொண்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் காளிதாஸ் கூறியதாவது:– திருவாடானை தாலுகாவில் பலமுறை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தும் இதுநாள் வரை ஆதார் அட்டை கிடைக்கவில்லை. ஆனால் ரே‌ஷன்கார்டில் ஆதார் எண் கட்டாயம் இணைக்கவேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது திருவாடானை தாலுகாவில் ஆதார் எண் இணைக்காத 6,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். வேறு ஆதாரங்கள் பெற்றுக்கொண்டு ஆதார் எண் இணைக்கும் வரை ரே‌ஷன் பொருட்களை நிறுத்தாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

இதுகுறித்து திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சுமதி கூறியதாவது:– திருவாடானன தாலுகாவில் இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மட்டும் ரே‌ஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது விடுபட்டவர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனுகொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட ரே‌ஷன்கடை பணியாளர் மூலம் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு குடிமைப்பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தாலுகா அலுவலகத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. புகைப்படம் எடுத்தவர்களுக்கு 15 தினங்களில் ஆதார் எண் கிடைத்து விடுகிறது. இந்த தாலுகாவில் இதுவரை ஆதார் எண் குடும்ப அட்டையில் இணைக்காதவர்கள் உடனே இணைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story