கல்லூரி அலுவலர்கள் பணி நியமனத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கல்லூரி அலுவலர்கள் பணி நியமனத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-07T22:28:09+05:30)

கல்லூரி அலுவலர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு உசிலம்பட்டியை சேர்ந்த வனராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரை,

கல்லூரி அலுவலர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

உசிலம்பட்டியை சேர்ந்த வனராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் கள்ளர் கல்விக்கழக உறுப்பினராக உள்ளேன். கள்ளர் கல்விக்கழகம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் கலைக்கல்லூரியும் ஒன்று. கள்ளர் கல்விக்கழகத்தின் செயலாளர் பாண்டியன் தான் அந்த கல்லூரியின் தாளாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரும், கல்லூரி பொறுப்பு முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த கல்லூரியில் 10 அலுவலர்களை நியமித்துக்கொள்ள, கல்லூரி கல்வி இயக்குனர் அனுமதி வழங்கினார். அந்த பணியிடங்களுக்கு தகுதி இல்லாதவர்களையும், தங்களுக்கு வேண்டியவர்களையும் நியமித்து முறைகேடு செய்துள்ளனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசாரிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.


Next Story