முசிறி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் ஆய்வுக்குழுவினரிடம் வலியுறுத்தல்


முசிறி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் ஆய்வுக்குழுவினரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-08T02:07:35+05:30)

முசிறி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் ஆய்வுக்குழுவினரிடம் வலியுறுத்தல்

முசிறி,

முசிறி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று ஆய்வுக்குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

வறட்சி பகுதிகள் ஆய்வு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர், செல்லாயிகோயில்மேடு, அய்யம்பாளையம், சேந்தமாங்குடி, வீரமணிப்பட்டி, கொடுந்துறை ஆகிய பகுதிகளில் தமிழக நெடுஞ்சாலைகள் துறை, சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளரும், கூடுதல் தலைமை செயலாளருமான ராஜீவ்ரஞ்சன் தலைமையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் பழனிசாமி, ரத்தினவேல் எம்.பி., முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் அடங்கிய ஆய்வு குழுவினர் வறட்சியால் நெற்பயிர்கள் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆய்வு குழுவினரிடம் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், காய்ந்து போன நெற்பயிர்களை காண்பித்து தாங்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் மழை இல்லாததாலும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததாலும் காய்ந்து போனதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தினர். மேலும் முசிறி வட்டாட்சியர் வாயிலாக தாலுகா முழுவதும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேளாண் அலுவலர்களை கொண்டு பாகுபாடின்றி சேத மதிப்பை துல்லியமாக கணக்கிட்டு பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

நிவாரணம் கிடைக்க ஏற்பாடு

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது, சேத மதிப்பு கணக்கீடு செய்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், முசிறி கோட்டாட்சித் தலைவர் ஜானகி, முசிறி தாசில்தார் பாலாஜி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story