கீழையூர் ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு


கீழையூர் ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T02:10:19+05:30)

கீழையூர் ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு

வேளாங்கண்ணி,

கீழையூர் ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பருவமழை ஏமாற்றியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும் நம்பி விவசாயிகள் குறுவை, சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் மேட்டூர் அணை தண்ணீரும், பருவமழையுமே நீராதாரமாக உள்ளது. இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி திறந்துவிடப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் வாய்க்காலில் மட்டுமே பாய்ந்தது. வயலில் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் வரவில்லை. இதையடுத்து பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பருவமழையும் கைவிட்டதால் விவசாயிகள் பயிரிட்ட சம்பா பயிர்கள் அனைத்தும் கருகி போனது. இதனால் விவசாயிகள் பயிர் செய்த வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிட்டனர். பருவமழை பொய்த்து போனதால் ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வருகின்ற காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், வட்டிக்கு கடன் வாங்கியும், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகியதை காணும் விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை மூலமும், அதிர்ச்சியிலும் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயரிழந்துள்ளனர்.

உயர்மட்ட குழுவினர் ஆய்வு

எனவே, கடும் வறட்சி ஏற்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருவாய்மூர், எட்டுகுடி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஒ.எஸ்.மணியன், வருவாய் துறை அரசு செயலாளர் சந்திரமோகன், நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி அடங்கிய உயர் மட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் தங்களது வயல்களில் கருகிய பயிர்களை எடுத்து வந்து குழுவினரிடம் காண்பித்து, வறட்சியின் காரணமாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கள ஆய்வு

பின்னர் இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் இதுவரை சாகுபடி மேற்கொண்ட பரப்பளவில் 14 எக்டேர் அறுவடை பருவத்திலும், 24 ஆயிரத்து 859 எக்டேர் பால்கட்டும் பருவத்திலும், 98 ஆயிரத்து 413 எக்டேர் தண்டுருளும் பருவத்திலும், 6 ஆயிரத்து 695 எக்டேர் தூர் கட்டும் பருவத்திலும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பருவமழை குறைபாட்டாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும், சம்பா சாகுபடி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல்-அமைச்சரின் உத்தரவின்படி வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட கலெக்டர் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புவன் எனப்படும் செயலி மூலமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடன் கள ஆய்வு செய்யும் வயலின் புகைப்படம் கைப்பேசி மூலமாக பதிவேற்றம் செய்து உடனே அரசுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மொத்த பரப்பில் 74 ஆயிரத்து 263 எக்டேர் மிக அதிக அளவு பாசன நீர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 319 எக்டேர் பரப்பில் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு மாதம் அறுவடை பருவத்தில் இருக்க வேண்டிய நெற்பயிர்கள் வளர்ச்சியின்றி காணப்படுவதால் மகசூல் குறைவு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை உரிய நடவடிக்கைக்காக அரசின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கீழ்வேளூர் முன்னாள் தொகுதி செயலாளர் பால்ராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேதையன், மாவட்ட இணை செயலாளர் மீனா, மதிவாணன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

கொள்ளிடம், கீழ்வேளூர்

முன்னதாக கொள்ளிடம் ஒன்றியத்துக்குட்பட்ட சீயாளம், பன்னங்குடி, ஆலாலசுந்தரம், ஆச்சாள்புரம், பழையபாளையம், ஆரப்பள்ளம், நல்லூர், மாதானம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளிலும், கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடி, பட்டமங்கலம் ஆகிய பகுதிகளிலும் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.


Next Story