ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி


ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-08T02:19:20+05:30)

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காய்கறி மார்க்கெட் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும். ஒட்டன்சத்திரம், அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்க

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காய்கறி மார்க்கெட்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும். ஒட்டன்சத்திரம், அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை இந்த மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் இந்த காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சுமார் 70 சதவீத காய்கறிகளை கேரள மாநில வியாபாரிகளே வாங்கிச்செல்கின்றனர். இதனால் நாள்தோறும் சுமார் 400 முதல் 500 டன் காய்கறிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாவதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை பெய்யாததால் காய்கறி சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு பிரச்சினை

ஆனாலும் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிமாநிலங்களிலும் காய்கறி சாகுபடி செய்யப்பட்டதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயரவில்லை. இதற்கிடையே 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து மார்க்கெட்டில் சில்லறை வியாபாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் காய்கறிகளின் விலையும் குறைய தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் சாகுபடி செய்த சின்னவெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காததால் அவற்றை இருப்பு வைத்தனர். மார்க்கெட்டிற்கு வரத்து குறையும் வேளையில் நல்ல விலை கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் இருப்பு வைத்திருந்த சின்னவெங்காயத்தை மார்க்கெட்டிற்கு விவசாயிகள் தற்போது விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். ஆனால் வெளிமாநில வியாபாரிகள் யாரும் சின்னவெங்காயத்தை கொள்முதல் செய்யவில்லை. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களே வீட்டு பயன்பாட்டிற்காக சின்னவெங்காயத்தை வாங்கிச் சென்றனர். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ சின்னவெங்காயம் தற்போது ரூ.7 முதல் ரூ.12 வரையே விற்பனையானது. அதே போல் கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயத்துக்கும் ரூ.10 முதல் ரூ.15 வரையே விலை கிடைக்கிறது.

இது குறித்து மார்க்கெட்டில் கமிஷன் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், பருவமழை பொய்த்து போனதால் மேட்டூர் பாசன விவசாயிகள், திருநெல்வேலி, பெரியார் அணை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் சாகுபடிக்கு பதிலாக சின்னவெங்காயத்தை நடவு செய்தனர். அந்த ஊர்களில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு சின்னவெங்காயம் வரத்தொடங்கியது. இதனால் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த சின்னவெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார். 

Next Story