உதவி பேராசிரியை கொலையில் 20 பேரிடம் விசாரணை: கொலையாளி விரைவில் பிடிபடுவார் துணை கமி‌ஷனர் லட்சுமி உறுதி


உதவி பேராசிரியை கொலையில் 20 பேரிடம் விசாரணை: கொலையாளி விரைவில் பிடிபடுவார் துணை கமி‌ஷனர் லட்சுமி உறுதி
x
தினத்தந்தி 7 Jan 2017 10:30 PM GMT (Updated: 7 Jan 2017 9:12 PM GMT)

உதவி பேராசிரியை கொலையில் அவரது உறவினர்கள் 20 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து விரைவில் கொலையாளி பிடிபடுவார் என்று துணை கமி‌ஷனர் லட்சுமி தெரிவித்தார். உதவி பேராசிரியை எரித்துக்கொலை கோவை அருகே இருகூர் ஐ.ஓ.பி.காலனியை சேர்ந்தவர்

கோவை,

உதவி பேராசிரியை கொலையில் அவரது உறவினர்கள் 20 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து விரைவில் கொலையாளி பிடிபடுவார் என்று துணை கமி‌ஷனர் லட்சுமி தெரிவித்தார்.

உதவி பேராசிரியை எரித்துக்கொலை

கோவை அருகே இருகூர் ஐ.ஓ.பி.காலனியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி லதா (வயது 38). இவர் திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சத்திய பிரபு (4) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடுகாரணமாக சிவலிங்கமும், லதாவும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியாக வசித்து வந்த லதா தனது மகனை அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் லதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

கொலையாளிகள் யார்?

கொலை செய்யப்பட்ட லதா அணிந்திருந்த 5 பவுன் நகையும் கொள்ளைபோய் இருந்தது. ஆனால் அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதற்கிடையில் கொலை நடந்த வீட்டிலும், லதாவின் உடல் அருகிலும், மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி மேற்பார்வையில், உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார், பேராசிரியை லதா எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து 4 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியை லதா தினசரி காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி ரெயிலில் திருப்பூரில் உள்ள கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலை 8 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

உள்பக்கம் கதவு பூட்டாமல் கிடந்தது

கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் லதா, ரூ.30 லட்சத்துக்கு வங்கிக்கடன் மூலம் புதிய வீடு வாங்கி உள்ளார். அந்த புதிய வீட்டில் தான், தற்போது அவர் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் தனியாக இருப்பதால், வீட்டுக்கு வந்ததும் கதவை பூட்டி விடுவது வழக்கம். யாராவது தெரிந்த உறவினர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் லதா கொலை செய்யப்பட்டு கிடந்த அன்று, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டாமல் திறந்து கிடந்தது. ஆகவே லதாவுக்கு நன்கு தெரிந்த, அறிமுகமான நபர் வீட்டுக்கு வந்து, கொலையை அரங்கேற்றி இருக்கலாம். கொலையை மறைப்பதற்காக, கொள்ளையடித்தது போன்று நாடகம் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

செல்போனில் பேசியவர்கள் யார்–யார்?

மேலும் அவர் 2 செல்போன்கள் வைத்திருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு செல்போன் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றொரு செல்போன் மாயமாகி விட்டது. அந்த செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.ஒருவேளை அந்த செல்போன் மூலம் தொடர்பு கொண்டுதான் கொலையாளி, அவரது வீட்டுக்குள் வந்துள்ளதாகவும், அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்த நபராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே லதா கடைசியாக செல்போனில் யார்–யாரிடம் பேசி உள்ளார்? அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் எத்தனை? என்பது குறித்து போலீசார் பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

20 பேரிடம் விசாரணை

இந்த கொலையில், லதா பயன்படுத்திய செல்போன் மூலம் துப்பு துலக்கப்படுகிறது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து செல்போனுக்கு வந்த எண்களை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. அவருக்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இது குறித்து அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 20–க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்து உள்ளன. விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story