தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் இருந்ததால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகை


தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் இருந்ததால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகை
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-08T02:56:38+05:30)

தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் இருந்ததால் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்த மாநகராட்சி அதிகாரிகளை திருப்பூர் வினோபாநகர் பகுதியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி மறுப்பு திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்

திருப்பூர்,

தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் இருந்ததால் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்த மாநகராட்சி அதிகாரிகளை திருப்பூர் வினோபாநகர் பகுதியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதி மறுப்பு

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகள் தோறும் சென்று தண்ணீர் தொட்டிகளில் ‘அபெட்’ மருந்து ஊற்றியும், கொசு மருந்து அடித்தும் வருகிறார்கள். வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் இருந்தால் அந்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், குடிநீர் இணைப்பையும் துண்டிப்பு செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுகாலை மாநகராட்சியின் 51–வது வார்டுக்கு உட்பட்ட புதூர் பிரிவு வினோபாநகர், பி.கே.ஆர். லே–அவுட் பகுதியில் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டியில் ‘அபெட்’ மருந்து ஊற்றினார்கள். வினோபாநகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று தண்ணீர் தொட்டியை பார்வையிட சுகாதார பணிகளை அனுமதிக்க மறுத்தனர். இதனால் அந்த வீட்டு பெண்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் முற்றுகை

பின்னர் தொட்டியை பார்வையிட்டபோது, கொசு புழுக்கள் இருந்தது. தொட்டிக்குள் ‘அபெட்’ மருந்து ஊற்றுவதற்கு சென்ற பணியாளர்களை அந்த வீட்டில் இருந்த பெண்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் வந்து, அந்த பெண்களிடம் விளக்கி கூறினார். கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கே இந்த பணிகளை செய்வதாக தெரிவித்தார். இருப்பினும் ‘அபெட்’ மருந்து ஊற்றுவதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அந்த வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை முற்றுகையிட்டனர்.

போலீசார் அறிவுரை

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘மாநகராட்சி பணியாளர்களை, கொசு ஒழிப்பு பணி செய்ய விடுங்கள்’ என்று அறிவுரை கூறி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story