உயிருடன் கொளுத்தப்பட்ட தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டம்

உயிருடன் கொளுத்தப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்ததை தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கண்டமங்கலம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமைதூக்கும் தொழிலாளி விழுப்புரம் மாவட்டம
கண்டமங்கலம்,
உயிருடன் கொளுத்தப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்ததை தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கண்டமங்கலம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சுமைதூக்கும் தொழிலாளி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பெரியபாபு சமுத்திரம் காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ் (வயது 23). சுமைதூக்கும் தொழிலாளி. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இரவு 11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் விஜி என்பவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.
செல்போனில் சிக்னல் சரியாக இல்லாததால், வீட்டின் பின்பக்கம் உள்ள ஏரி பகுதிக்குச் சென்று அங்கிருந்த மின்கம்பத்தின் அருகில் நின்று சதீஷ் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ சதீசை பின்தொடர்ந்து வந்து, அவர் அணிந்து இருந்த லுங்கியால் அவரது முகத்தை மூடி சரமாரியாக தாக்கினர். இதன்பின் அவரது உடலில் தீ வைத்து விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தீ எரிந்த நிலையில் ஓட்டம்
உடலில் தீப்பிடித்து எரிந்தநிலையில் நண்பர் விஜியின் வீட்டிற்கு சதீஷ் ஓடிவந்தார். அங்கு உலருவதற்காக போடப்பட்டு இருந்த ஒரு சேலையை எடுத்து தனது உடலில் சதீஷ் சுற்றினார். இதைப் பார்த்ததும் விஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, உடனே அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
வாக்கு மூலம் பதிவு
இந்த சம்பவம் பற்றி அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜன், கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் (பொறுப்பு), சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஷாஜகான், தடயவியல் நிபுணர் சண்முகம் ஆகியோர் சதீஷ் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் மின்துறை ஊழியர்களை அழைத்து, அருகில் உள்ள மின்கம்பத்தில் மின்கசிவு காரணமாக சதீசின் உடலில் தீ பிடித்திருக்கலாமா? என்று விசாரித்தனர். ஆனால் மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதீசிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம், ஏரிக்கரை பகுதியில் என்ன நடந்தது என்பதே தனக்கு தெரியவில்லை என்று சதீஷ் தெரிவித்தார். அவரது உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி மாஜிஸ்திரேட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று, சதீஷிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்.
பரிதாப சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.இதனால் பெரியபாபு சமுத்திரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.போலீசாரை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் உடலை வாங்க மறுத்தும் நேற்று பெரியபாபு சமுத்திரம் பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளர் சிந்தனைச் செல்வன், மற்றும் பிரமுகர்கள் ஆற்றல் அரசு, தமிழ்மாறன், பால்வண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கலியன், தலைமையில் அப்பகுதியினர் கண்டமங்கலம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் ராஜராஜன், சுருளிராஜன்,வெள்ளைச்சாமி, தாசில்தார்கள் அரும்புலவன், ஆனந்த்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது;–
2017 புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது பெரியபாபு சமுத்திரம், ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வாலிபர் சதீஷ் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தை கொலை வழக்காக உடனே பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனகூறினர். மேலும் பிரேத பரிசோதனை செய்து டாக்டர்கள் கொடுத்த சான்றிதழ், மாஜிஸ்திரேட்டிடம் சதீஷ் கொடுத்த வாக்கு மூலம் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமண்டல ஐ.ஜி. தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்கள்.
இதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.