போராடி கிடைத்த புகழ் வாழ்க்கை


போராடி கிடைத்த புகழ் வாழ்க்கை
x
தினத்தந்தி 8 Jan 2017 10:02 AM GMT (Updated: 8 Jan 2017 10:02 AM GMT)

துபாயின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நைலா அல் காஜா. திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய சிறுவயது கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை நிஜமாக்க

துபாயின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நைலா அல் காஜா. திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய சிறுவயது கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை நிஜமாக்க இவர் பெரும் போராட்டம் நடத்தியிருக்கிறார். துபாயில் வசித்து வரும் இவர், தன்னுடைய போராட்ட வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘என் இளமை பருவம் மிகவும் மகிழ்ச்சியானது. அப்பா அடிக்கடி வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார். அவருக்கு திரைப்படங்கள் பிடிக்கும். அதனால் அவரிடம் நிறைய திரைப்படங்களின் தொகுப்பு இருந்தது. அவைகளுள் இந்திய திரைப்பட தொகுப்புகள் மட்டும் 900–க்கும் அதிகமாக இருந்தன. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் நான் அவர் தொகுத்து வைத்திருக்கும் சினிமாக்களை பார்ப்பேன். அது எனது அன்றாட பழக்கமாகி விட்டது. அதிலும் 1950–ல் இருந்து1960வரை வெளிவந்த படங்களை ரசித்து பார்ப்பேன். அந்த படங்களில் இடம் பெறும் பொருட்கள், காட்சிகள் என்னை கூர்ந்து கவனிக்க வைத்தது. அதை எப்படி, எந்த கோணத்தில் படம் பிடித்திருப்பார்கள் என்று யோசித்தேன். அந்த ஆர்வம்தான் என்னை சினிமா துறையை நோக்கி கவனம் பதிக்க வைத்தது. எனக்கு சிறு வயதில் ஓவியம் வரையும் ஆர்வமும் இருந்தது. பார்க்கும் பொருட்களையெல்லாம் ஓவியமாக வரைந்துகொண்டிருப்பேன்’’ என்கிறார்.

 நைலா தனது சினிமா, ஓவிய ஆர்வத்தை வளரச் செய்யும் வகையில் தன்னுடைய மேற்படிப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது. அது பற்றி சொல்கிறார்..

‘‘பள்ளிப்படிப்பை முடித்ததும் நுண்கலை துறையை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினேன். அதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தேன். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவர்கள் எனக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினார்கள். ஒன்று துபாயிலேயே கல்லூரி படிப்பைத் தொடர்வது அல்லது படிப்பை கைவிட்டு விட்டு வீட்டிலேயே இருப்பது. படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க எனக்கு மனமில்லை. வெளிநாட்டுக்கு சென்று விரும்பிய கல்வியை கற்க முடியவில்லையே என்று விரக்தி அடைந்தேன். அதனால் எனது பெற்றோர் துபாயில் கல்லூரி படிப்பை முடித்தால் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்கள். நானும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று துபாயில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாஸ் கம்யூனிகே‌ஷன் படிப்பில் சேர்ந்தேன்.

படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கு சென்று விடுவேன் என்று தோழிகளிடம் மகிழ்ச்சியாக கூறி வந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சியும் கல்லூரி வாழ்க்கையோடு முடிவுக்கு வந்தது. நான் வெளிநாடு செல்வதில் வீட்டில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை. நானோ வெளிநாட்டுக்கு சென்றே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தேன். பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார்கள்’’ என்கிறார்.

 அந்த நிபந்தனையும் நைலாவுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. அதாவது திருமணத்திற்கு சம்மதித்தால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார்கள்.

‘‘படிக்க வேண்டும் என்று ஆசைப்படும்போது திருமணம் என்ற சுமையை எப்படி தலையில் ஏற்றிக் கொள்வது? என்று நீண்ட நேரம் யோசித்தேன். அப்போதுதான் கனடாவில் இருந்த ரேயர்சன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ‘ஸ்கூல் ஆப் ரேடியோ அண்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ்’–ல் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. இந்த அருமையான சந்தர்ப்பத்தை நான் இழக்க   விரும்பவில்லை. அதனால் திருமணத்திற்கு சம்மதித்தேன். ஆனாலும் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. ‘அங்கு வகுப்பு தொடங்குவதற்குள் திருமணம் நடக்க வேண்டும். என் மனநிலையைப் புரிந்து என்னை படிக்க அனுமதிக்கும் கணவர் கிடைக்க வேண்டும்’ என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அப்படி ஒருவர் கிடைத்தார். திருமணத்திற்கு முன்பே அவரிடம் நான் என் நிபந்தனையை தெரிவித்து விட்டேன். அவரும் சம்மதித்தார். திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. நானும் என் கணவரும் வெளிநாட்டிற்கு சென்றோம். என் விருப்பப்படியே அங்கு படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்’’ என்கிற நைலா படிப்பை முடித்ததும் தன்னுடைய சிறு வயது கனவான சினிமாவுக்குள் நுழைய ஆர்வம் காட்டியிருக் கிறார். ஆனால் அதுவே அவருடைய இனிமையான இல்லற வாழ்க்கைக்குள் விரிசலை ஏற்படுத்தி விட்டது.

‘‘படிப்பை முடித்ததும் சினிமாவில் காலடி எடுத்து வைக்க முயற்சித்தேன். அதில் என் கணவருக்கு விருப்பமில்லை. அதை அறிந்ததும் நான் திகைத்துப் போனேன். இதற்காகவா இவ்வளவு தூரம் போராடினோம்? என்று விரக்தி அடைந்தேன். என் கல்வியறிவு இந்த சமூகத்திற்கு பயன்படாமல் வீணாகி போய் விடுமோ? என் கனவுக் கோட்டை முழுமையடையாமல் கலைந்து போய் விடுமோ என்று கலங்கினேன்.

சினிமா ஆசையை பற்றி திருமணத்தின் போது சொல்லாமல் போனது நான் செய்த தவறா? என்று எனக்குள் நானே கேள்வி எழுப்பி கொண்டேன். கடைசியாக திருமண வாழ்க்கையா.. திரைப்படமா? என்ற கேள்வி எழுந்தது. சினிமாவுக்குள் நுழையும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று நினைத்தேன். இறுதியில் சினிமா தான் முக்கியம் என்று முடிவெடுத்தேன். அதுபற்றி என் கணவரிடம் கூறினேன். அவரோ, ‘உன் விருப்பம் அதுவாக இருந்தால் திருமண வாழ்க்கையிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்றார். அதுதான் விதி என்றால் நான் என்ன செய்வது? என்று நொந்தபடி, விவாகரத்திற்கு சம்மதித்தேன். என் அம்மா–அப்பாவிற்கு வி‌ஷயம் தெரிந்தது. அதிர்ந்துப் போனார்கள். என்னை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார்கள். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவது மட்டும்தான் வாழ்க்கையா? என் எதிர்கால கனவை நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுவது தவறா? என்று கேள்வி எழுப்பினேன். அம்மா–அப்பாவிற்கு என் மீது கடுங்கோபம். மூன்று ஆண்டுகளாக என்னோடு பேசவில்லை’’ என்கிறார்.

 நைலா கடும் போராட்டத்திற்கு பிறகு சினிமா நிறுவனம் ஒன்றை தொடங்கி துபாயின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

‘‘2005–ல் துபாயில் டி–7 மோ‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். நான் தயாரித்த முதல் படம் அர்பான். சிறிய பட்ஜெட்டில் எடுத்த அந்த படத்தை 33 எம்.எம்.மில் படம்பிடித்தேன். அது அந்த சமயத்தில் தயாரிப்பு வட்டத்தில் சாதனையாக பார்க்கப்பட்டது. நாட்டின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றேன்.

2007–ல் நான் ‘சீன் கிளப்’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன். அங்கு உலகில் உள்ள எல்லா படங்களும் திரையிடப்படும். எல்லா படங்களையும் ஒரே இடத்தில் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆரம்பத்தில் 50 பேருடன் ஆரம்பித்த கிளப் இப்போது 9000 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த கிளப்பை எல்லா நாடுகளிலும் தொடங்க ஆசைப்படுகிறேன். சினிமா எனக்கு புகழை மட்டுமல்ல, மனிதர்களோடு பழகவும் கற்றுக் கொடுத்துள்ளது.

கேமராவிற்கு பின்னாலிருந்து இயக்கும்போது நான் ஒரு பெண் என்பதையே மறந்து விடுவேன். என் முன்னால் நிற்பவர்கள் நான் படைக்கப் போகும் கதாபாத்திரம். ஆண்–பெண் என்ற பேதமே எனக்குத் தெரியாது. சினிமாவிற்கு வந்ததும் நிறைய கனவு காண கற்றுக் கொண்டேன். கற்பனை உலகத்தில் காண்பதை நிஜமாக்க நினைக்கும் போது எனக்கு கதாபாத்திரத்தின் மீதுதான் முழு கவனமும் இருக்கும்’’ என்கிற நைலாவின் கண்ணோட்டத்தில் பெண்ணியம் குறித்தான பார்வை மாறுபடுகிறது.

‘‘எந்த வேலையாக இருந்தாலும் பெண்களுக்கு நிகராகத்தான் ஆண்களும் உழைக்கிறார்கள். பெண்களை மட்டும் பெருமைப்படுத்தும் விதமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறோம். சர்வதேச ஆடவர் தினம் ஏன்? கொண்டாடப்படுவதில்லை. ஆண்கள் சமூகத்தில் எதையும் போராடி சாதிக்க வில்லையா? பெண்களுக்கு எந்த துறையில் விருப்பம் உள்ளதோ அதில் நிறைய சாதிக்கலாம். அதைவிட்டுவிட்டு ஆண்களிடம் போராடி சம உரிமை பெறவேண்டும் என்று நினைப்பது தேவையற்றது”.என்கிறார், நைலா அல் காஜா.

கடைசியாக திருமண வாழ்க்கையா.. திரைப்படமா? என்ற கேள்வி எழுந்தது. சினிமாவுக்குள் நுழையும் அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று நினைத்தேன். இறுதியில் சினிமா தான் முக்கியம் என்று முடிவெடுத்தேன். அதுபற்றி என் கணவரிடம் கூறினேன். அவரோ, ‘உன் விருப்பம் அதுவாக இருந்தால் திருமண வாழ்க்கையிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்றார். அதுதான் விதி என்றால் நான் என்ன செய்வது? என்று நொந்தபடி, விவாகரத்திற்கு சம்மதித்தேன்.


Next Story