ராசிபுரம், திருச்செங்கோட்டில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


ராசிபுரம், திருச்செங்கோட்டில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T20:44:23+05:30)

ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மேட்டுத் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற

ராசிபுரம்,

ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மேட்டுத் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் பொன் வரதராஜ பெருமாள் சாமி உற்சவருக்கு புன்னியாகவாசனம் செய்யப்பட்டு சங்கல்பம் செய்யப்பட்டது. மூலவர் திருமேனிகளுக்கும், உற்சவர் திருமேனிகளுக்கும் முத்தங்கி சேவை சாதித்து பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

பரமபதவாசல் முன்பாக நம்மாழ்வார், ஆஞ்சநேயர் மூர்த்திகளுக்கு விசே‌ஷ சடாரி சார்த்தி விசே‌ஷ திரவியங்களைக் கொண்டு திரு ஆராதனம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடத்தப்பட்டது. பரமபதவாசல் வழியாக ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் பொன்வரதராஜ பெருமாள் உற்சவர் வெளியே வந்தபோது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பரவசத்துடன் கோ‌ஷமிட்டனர். அதனை தொடர்ந்து கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமியை தரிசித்து விட்டு பரமபத வாசல் மேல்புறம் அமைந்துள்ள தங்கம், வெள்ளியிலான பல்லிகளை பார்த்து தரிசனம் செய்தனர். பிறகு பரமபதவாசலை தொட்டு வணங்கி அதன் வழியாக வெளியே வந்தனர்.

லட்டுகள் வினியோகம்

சாமியை தரிசப்பதற்காக கோவிலில் இருந்து நாமக்கல் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்றனர். சொர்க்க வாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு 26–வது ஆண்டாக ஜன கல்யாண் சார்பில் 50 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பி.ஆர்.சுந்தரம் எம்.பி. லட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு லட்டுகளை வழங்கினார்.

அதேபோல் ராசிபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் முக்கிய பிரமுகர்கள் லட்டுகளை பக்தர்களுக்கு வழங்கினர். லட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜன கல்யாண் தலைவர் எஸ்.எம்.ஆர்.பரந்தாமன் தலைமை தாங்கினார். செயலாளர் சி.கே.ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அமைப்பாளர்கள் சீனிவாசா ஸ்டுடியோ அதிபர் சி.கே.சீனிவாசன், ராகவன், வெங்கடாசலம், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் அரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி கரும்பு விற்பனை ஜோராக நடந்தது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன், அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து (ராசிபுரம்), பாலமுருகன் (நாமகிரிபேட்டை) மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதையொட்டி மலைக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடன் அமர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று காலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து சாமிகள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோடு வேலூர் ரோடு, மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது பெருமாள் சாமி பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி கும்பிட்டனர்.

இதேபோல் திருச்செங்கோடு அக்ரகாரம் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், சங்ககிரி ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், குமரேசபுரம் அனுக்கிரக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள், சாமி ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோடு நகர பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


Next Story