வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T20:55:58+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நா

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்க வாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசாமி அருள்பாலிக்கிறார்.

இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில் நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டது. பின்னர் சாமி–அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

இதையொட்டி பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவே கோவிலுக்கு வருகை தந்து கடுங்குளிரையும் பொருட்படுத்தாது விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள பெருமாள், குபேர லிங்கம், சின்னக்கடை தெருவில் உள்ள பூத நாராயணர், அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் துருகம் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில், ஒண்ணுபுரம் வரதராஜ பெருமாள் கோவில், ராமநாதபுரம் லட்சுமி நரசிம்ம கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே பெரணமல்லூரில் உள்ள இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு காலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், பூதேவி தாயார், கல்யாணலட்சுமி, நரசிம்ம பெருமாள், ராமர், லட்சுமணன், சீதாதேவி, சத்கரத்து ஆழ்வார், ஸ்ரீஆண்டாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், பூதேவி ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் 5 தலைபாம்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை 5 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

போளூர்

போளூர் வேணுகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபாலசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போளூர் சுயம்புலட்சுமி நரசிம்மசாமி மலைக்கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பலர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story