வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-09T00:02:41+05:30)

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஏனெனில் ஏகாதசியில் விரதம

விழுப்புரம்,

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஏனெனில் ஏகாதசியில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதில் அனைத்து ஏகாதசியிலும் விரதம் இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருக்கும் விரதத்தால் பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனால் தான் வைகுண்ட ஏகாதசி தனி சிறப்பு பெறுகிறது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து 5 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி கோ‌ஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் அருகே பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வளாகத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவில், கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவில், பெரும்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் உள்பட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உலகளந்தபெருமாள் கோவில்

திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து சொர்க்கவாசல் மண்டபத்துக்கு வந்த பெருமாள் முதலில் நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். பின்னர் சொர்க்கவாசல் மண்டபத்தில் உலகளந்த பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஜீயர் சாமிகள், தொழிலதிபர்கள் உள்பட விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து விட்டுவருவதற்காக திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் லட்சுமிவிலாஸ் வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன சீட்டு வழங்கியதோடு, பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தினர்.

செஞ்சி

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் காலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் வெங்கட்ரமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மாடவீதியுலா நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீரங்க பூபதி கல்லூரி நிறுவன தாளாளர் வக்கீல் பூபதி, செயலர் ஸ்ரீபதி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரங்கநாதன், வக்கீல்கள் வைகை தமிழ்செல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு ரங்நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

லட்சுமி நாராயணபெருமாள்

திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி அதிகாலை 3 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின்னர் 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story