பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-09T00:10:07+05:30)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரம்பலூர்,

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்க வாசல் திறப்பு

பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக சன்னதி தெருவிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிந்தா... கோவிந்தா.. என்று பக்தி கோஷத்துடன் வந்தனர். பின்னர் கோவில் எதிரே உள்ள கம்பம் ஆஞ்சநேயரை பெருமாள் 3 முறை வலம்வந்து ஆண்டாள் சன்னதியில் சேவை சாதித்தார்.

திரளான பக்தர்கள்

இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழும தலைவர் சிவசுப்ரமணியன், செயலாளர் விவேகானந்தன், அன்னை பருவதம்மா பள்ளி தலைவர் கணேசன், கோவில் திருப்பணிக்குழு பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா தர்மராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொர்க்கவாசல் திறந்த பின்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவர் பெருமாளையும், உற்சவ பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

வீதிஉலா

தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க வெள்ளி கருடவாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். இதில் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இன்று (திங்கட்கிழமை) துவாதசி ஆராதனை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் கல்யாணி, அரியலூர் உதவி ஆணையர் செந்தில்குமார், பெரம்பலூர் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் மேற்பார்வையில் கோவில் நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கோவில் பட்டாச்சாரியார்கள் பட்டாபிராமன், மதனகோபாலன், பக்தர்கள் செய்திருந்தனர்.

பல்வேறு கோவில்களில்...

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள லட்சுமி நாராயணபெருமாள் கோவில், லாடபுரம் வரதராஜபெருமாள் கோவில், அம்மாபாளையம் பெருமாள் கோவில், எசனையில் உள்ள வேணு கோபாலசுவாமி கோவில், தழுதாழை, அரும்பாவூர், பூலாம்பாடி, குன்னம் பகுதிகளில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

அரியலூர் கோதண்டராமசாமி கோவில்

அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு பெருமாள் பச்சை பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு தசாவதார மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டதையடுத்து பெருமாள் அதன் வழியாக பிரவேசம் செய்து பக்தர் களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பரமபத வாசல் வழியாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குருவாலப்பர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள வீர நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் நேற்று காலை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில், சம்போடை கிராமத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அதிகாலையில் இருந்து வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதேபோல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில் களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Next Story