ஈரோடு மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடும் சிறப்பு குழு ஆய்வு


ஈரோடு மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடும் சிறப்பு குழு ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-09T00:10:09+05:30)

ஈரோடு மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடும் சிறப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்து தண்ணீரின்றி வாடிய பயிர்களை பார்வையிட்டனர். ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் கருகி விவசாயிகளுக

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடும் சிறப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்து தண்ணீரின்றி வாடிய பயிர்களை பார்வையிட்டனர்.

ஆய்வுக்குழு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குடிதண்ணீருக்கே தட்டுப்பாடான நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவர் தமிழ்நாடு வணிகவரித்துறை ஆணையாளர் சந்திரமவுலி தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரத்தில் நேற்று பிற்பகலில் இருந்து ஆய்வுக்குழுவினர் தங்கள் சோதனையை தொடங்கினார்கள். ஆய்வுக்குழு தலைவர் சந்திரமவுலியுடன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ், கோபி சப்–கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி, சத்தியபாமா எம்.பி., மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி தாசில்தார் குமரேசன் உள்பட அதிகாரிகள் உடன் வந்தனர்.

நம்பியூர்

நம்பியூர் வட்டாரத்தில் கோசணம், செல்லிபாளையம், தாழ்குனி, பருத்திக்காட்டு மேடு, கருவல்வாடிபுதூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுக்குழுவினர் விவசாய நிலங்களை பார்வையிட்டனர். இங்குள்ள விவசாய நிலங்களில் மஞ்சள், தென்னை மரம், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, கொள்ளு, தீவன சோளத்தட்டை மற்றும் மானாவாரி பயிர்கள் முழுமையாக வாடி கருகிக்கிடப்பதை பார்வையிட்டனர். விவசாயிகள் பெரும் சோகத்துடன் தண்ணீரின்றி வாடிய பயிர்களை அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் காட்டினார்கள். சில பகுதிகளில் வாடிய பயிர்களை விவசாயிகளிடம் இருந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் பெற்று அவற்றை ஆய்வுக்குழு தலைவர் சந்திரமவுலியிடம் காட்டினார்.

பல இடங்களில் பனை மரங்கள் கூட வறட்சியால் காய்ந்து நிற்பதையும் விவசாயிகள் அதிகாரிகள் குழுவினரிடம் காண்பித்தார்கள்.

கோபி

இதுபோல் கோபி வட்டாரத்தில் செங்கலரை, உடையாக்கவுண்டம்பாளையம், ஓலப்பாளையம், அளுக்குளி, கோபிசின்னான்பாளையம், கொளப்பலூர், சிறுவலூர் உள்ளிட்ட பகுதியில் ஆய்வுக்குழுவினர் விவசாய நிலங்களை பார்வையிட்டனர். அப்போது கூடி இருந்த விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு வற்றி தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி இருப்பதை எடுத்துக்கூறினார்கள். உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:–

தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை மிகவும் குறைந்த அளவில்தான் பெய்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரின்றி பயிர்கள் கருகிவிட்டன. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள ஆய்வுக்குழு ஈரோடு மாவட்டத்துக்கு வந்து இருக்கிறது. குழு அதிகாரிகள் 2 நாட்கள் மாவட்டத்தில் 60 இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிடுகிறார்கள். பின்னர் வட்டாரம் வாரியாக பட்டியல் தயாரித்து தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பெருந்துறை

அதைத்தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திங்களூர், கருக்குபாளையம், சீனாபுரம், சுள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு சென்று வறட்சி நிவாரண குழுவினர் வறட்சியால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கு வறட்சியின் நிலவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் ‘பருவமழை பொய்த்து போனதால் தாங்கள் விளைவித்த கடலை, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகிப்போனது’ என்று கூறினார்கள். இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.சாமிநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் இருந்தனர்.


Next Story