திருப்பூர் மாநகரில் கிடப்பில் போடப்பட்ட நடைமேம்பால பணி வீணாகும் மக்கள் வரிப்பணம்


திருப்பூர் மாநகரில் கிடப்பில் போடப்பட்ட நடைமேம்பால பணி வீணாகும் மக்கள் வரிப்பணம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:00 PM GMT (Updated: 8 Jan 2017 7:29 PM GMT)

நடைமேம்பாலம் சென்னை பெருநகருக்கு இணையாக வாகன போக்குவரத்து கொண்ட திருப்பூர் மாநகரில் பாதசாரிகள் ரோட்டை கடப்பதற்காக திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு ஒரு சுரங்க மேம்பாலம் மட்டுமே உள்ளது. மேலும் திருப்பூர் பார்க் ரோடு தவிர மாநகரில் உள்ள எந்த சாலையிலும் பா

திருப்பூர் நகரில் குறுகிய ரோடுகளில் அபரிமிதமான வாகன போக்குவரத்து காரணமாக பொதுமக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாநகரில் உள்ள பிரதான சாலைகளின் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க பெண்கள், வயதானவர்கள், மாணவ–மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு என்று எந்த ஒரு சந்திப்பிலும் வெள்ளை கோடுகள் (ஜீப்ரா லைன்) போடப்படவில்லை. இதனால் வாகன நெரிசல் மிகுந்த சாலையை கடக்கும் போது சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

நடைமேம்பாலம்

சென்னை பெருநகருக்கு இணையாக வாகன போக்குவரத்து கொண்ட திருப்பூர் மாநகரில் பாதசாரிகள் ரோட்டை கடப்பதற்காக திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு ஒரு சுரங்க மேம்பாலம் மட்டுமே உள்ளது. மேலும் திருப்பூர் பார்க் ரோடு தவிர மாநகரில் உள்ள எந்த சாலையிலும் பாதசாரிகள் செல்வதற்கு என்று சாலையின் இருபுறமும் தனியாக நடைபாதையும் கிடையாது. இதனால் பொதுமக்கள், சாலையோரம் வாகனம் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள வெள்ளை கோட்டை தாண்டி நடந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகள் ரோட்டை கடக்க நடைமேம்பாலம் அமைக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்திப்பு, திருப்பூர் குமரன் ரோட்டில் டவுன்ஹால் சந்திப்பு, திருப்பூர் ரெயில் நிலையம் அருகே அவினாசி ரோடு–பி.என்.ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு–காங்கேயம் ரோடு சந்திப்பு, காங்கேயம் ரோடு செயிண்ட் ஜோசப் பெண்கள் பள்ளி முன்பு, குமார் நகர் சந்திப்பு உள்பட 6 இடங்களில் ரூ.4.03 கோடி மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது.

அனுமதி இல்லை

அத்துடன், நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ள சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்ததால், நடைமேம்பாலம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. அத்துடன், முதற்கட்ட பணியாக, ராட்சத இரும்பு கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்ட இரும்பு தூண்கள் தயாரிக்கப்பட்டு, திருப்பூர் டவுன்ஹால் மற்றும் காங்கேயம் ரோடு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கேயம் ரோடு தவிர பிற பகுதிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதிவரை அனுமதிகொடுக்கவில்லை.

இதற்கிடையே அவினாசி முதல் அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் அந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதனால் நடைமேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் காத்துக்கிடக்கிறது. அதே நேரம், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக காங்கேயம் ரோடு பகுதியில் பூமிபூஜை போடப்பட்டது.

வீணாகும் வரிப்பணம்

அத்துடன் அங்கு ரோட்டின் இருபுறமும் இரும்பு தூண்கள் பொருத்த அடித்தளம் அமைக்க பெரிய குழி தோண்டப்பட்டன. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதுபோல், மாநகரில் பிற இடங்களில் நடைமேம்பாலம் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத இரும்பு தூண்கள், டவுன்ஹால் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு கேட்பாரற்றுக்கிடக்கின்றன.

வெயிலிலும், மழையிலும், இரும்பு தூண்கள் கிடந்து துருப்பிடித்து வருவதால் தங்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே நடை மேம்பால பணிகளை விரைந்து தொடங்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story