திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு கண்ணீருடன் விவசாயிகள் முறையீடு


திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு கண்ணீருடன் விவசாயிகள் முறையீடு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:30 PM GMT (Updated: 8 Jan 2017 7:29 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் கண்ணீருடன் முறையிட்டனர். அமைச்சர் ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேற்று வீட்டுவசதி ம

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் கண்ணீருடன் முறையிட்டனர்.

அமைச்சர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் எஸ்.ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி சாமந்தக்கோட்டை பகுதியில் லட்சுமி என்ற பெண் விவசாயி 1¾ ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு இருந்த சோளம் பயிர் முற்றிலும் கருகி போய்விட்டது. அந்த விவசாய நிலத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். கருகி போய் கிடந்த சோளப்பயிரை கையில் எடுத்து அமைச்சர் பார்வையிட்டார். கடன் வாங்கி பயிரிட்ட சோளப்பயிர் கருகி விட்டதால் மிகவும் சிரமத்தில் உள்ளதாக லட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அமைச்சரிடம் முறையிட்டனர்.

மக்காச்சோளம்

இதைத்தொடர்ந்து குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி அய்யம்பாளையம் புதூர் பகுதியில் பெரியசாமி என்ற விவசாயி நிலத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் கருகி போய் இருந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி பெரியசாமி அமைச்சரிடம் கூறும்போது, “ரூ.1 லட்சம் செலவு செய்து 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். அமராவதி பாசனம், நிலத்தடி நீர் கைகொடுக்கவில்லை. வறட்சியால், பயிரிட்ட 3 மாதத்தில் மக்காச்சோளம் அனைத்தும் கருகி விட்டது. எங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்றார்.

இதற்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், “இது குறித்து அரசிடம் தெரிவித்து உரிய நிவாரணம் நிச்சயம் பெற்றுத்தரப்படும்“ என்றார்.

கண்ணீருடன் விவசாயிகள்

பின்னர் மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தியில் பழனிச்சாமி என்ற விவசாயி தனது 3¾ ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருந்த சோளப்பயிர் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது பழனிச்சாமியின் குடும்பத்தினர், கடன் வாங்கி சோளத்தை பயிரிட்டோம். இதற்கு முன் இந்த அளவுக்கு மழை பொய்த்துப்போனது இல்லை. மிகப்பெரிய சிரமம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீருடன் முறையிட்டனர். அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து தாராபுரம் ஒன்றியம் செலாம்பாளையத்தில் சின்னத்தம்பி என்ற விவசாயி 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிர் முற்றிலும் கருகி போய் இருந்ததை அமைச்சர் பார்வையிட்டார். மாவட்டத்தில் அதிகமாக மானாவாரி பயிரான சோளம், மக்காச்சோளம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு பயிரும் கருகி போய் உள்ளதால் அதையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் பட்டியலில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்

பின்னர் காங்கேயம் ஒன்றியம் முள்ளிபுரம் இளந்தைகாட்டுப்பதியில் விவசாயி சுப்பிரமணியம் என்பவர் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு கருகி போன சோளப்பயிரை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் திருப்பூர் ஒன்றியம் ஈட்டிவீரம்பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த சோளப்பயிர் வறட்சியால் முற்றிலும் சேதமானது. அதை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் எம்.பி.க்கள் மகேந்திரன்(பொள்ளாச்சி), செல்வகுமாரசின்னையன்(ஈரோடு), எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி உதவி கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்(திருப்பூர்), கிரேஷ் பச்சுவா(தாராபுரம்), வேளாண்மை துறை இணை இயக்குனர் ரங்கநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்தாப், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story