1976–ம் ஆண்டில் ஏற்பட்ட நிலை மீண்டும் வருமோ? என மக்கள் அச்சம் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் மைதானமாக மாறும் ஸ்ரீவைகுண்டம் அணை


1976–ம் ஆண்டில் ஏற்பட்ட நிலை மீண்டும் வருமோ? என மக்கள் அச்சம் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால்  மைதானமாக  மாறும் ஸ்ரீவைகுண்டம் அணை
x
தினத்தந்தி 8 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-09T01:30:53+05:30)

1976–ம் ஆண்டில் ஏற்பட்ட நிலை மீண்டும் வருமோ? என மக்கள் அச்சம் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் மைதானமாக மாறும் ஸ்ரீவைகுண்டம் அணை

ஸ்ரீவைகுண்டம்,

தண்ணீர் வரத்து குறைந்ததால் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை வறண்டு அதன் ஒரு பகுதி மைதானம் போல் மாறிவிட்டது. இதனால் 300–க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தரிசான நிலங்கள்

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்து உள்ளது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து அனைவரின் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்து விட்டது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆற்றுப்பாசன நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. ஆழ்குழாய் கிணறு மற்றும் மின் இணைப்பு வைத்துள்ள ஒரு சில விவசாயிகள் மட்டும் குறைந்த பரப்பளவில் நெல் பயிரிட்டு உள்ளனர்.

வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட உளுந்து, பாசி பயறு, மக்காச்சோளம், கம்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய் போன்ற அனைத்து பயிர்களும் மழையின்றி கருகி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

மைதானமாக மாறிய அணை

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உறைகிணறுகள் அமைத்து பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 4–வது குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் 300–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து புன்னக்காயல் வரையிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

நீர்வரத்து குறைந்ததால் தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதனால் அங்கிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு வழக்கத்தைவிட குறைந்த அளவே குடிதண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி கரையோர பகுதி தண்ணீரின்றி மைதானம் போல் மாறி காட்சி அளிக்கிறது. பெரும்பாலான உறைகிணறுகளும் தண்ணீரின்றி முழுவதுமாக வெளியே தெரிகின்றன. சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கூறியதாவது:–

கடந்த 1976–ம் ஆண்டு இதேபோன்று பருவமழை பொய்த்ததால் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை வறண்டது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, தாமிரபரணி ஆற்றில் பள்ளம் தோண்டி, ஊற்று தண்ணீரை பல மணி நேரம் நின்று சேகரித்து, குடங்களில் எடுத்துச் சென்றார்கள்.

அதன்பின்பு இப்போது ஸ்ரீவைகுண்டம் அணை வேகமாக வறண்டு வருகிறது. மழை பெய்யவில்லையெனில் இன்னும் நிலைமை விபரீதமாகிவிடும். 1976–ம் ஆண்டின் நிலை ஏற்பட்டு விடக்
கூடாது என்று இறைவனை வேண்டுகிறோம்.

கருவேல மரங்களை...

ஸ்ரீவைகுண்டம் அணையின் கிழக்கு பகுதியில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. உறைகிணறுகளை இந்த மரங்கள் சூழ்ந்து விட்டன. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தடி நீர்மட்டம் வரையிலும் சென்று, தண்ணீரை உறிஞ்சுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

எனினும் தாமிரபரணி ஆற்றில் நீரோட்டத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இந்த மரங்களை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story