சிதம்பரத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது


சிதம்பரத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 6 Feb 2017 2:31 PM GMT)

சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு அதன் மூலம் அந்த ரெயில் 2 மணிநேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. கம்பன் எக்ஸ்பிரஸ் காரைக்காலில் இருந்து சிதம்பரம் வழியாக

சிதம்பரம்,

கம்பன் எக்ஸ்பிரஸ்

காரைக்காலில் இருந்து சிதம்பரம் வழியாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.25 மணி அளவில் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தை கடக்கும் போது, என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த ரெயிலை இயக்க முடியவில்லை.

இது குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சிதம்பரத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று என்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாற்று என்ஜின்

ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் என்ஜின் கோளாறை ஊழியர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, மாற்று என்ஜின் மூலம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முடிவு செய்தனர். அதன்படி, புதுச்சத்திரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் என்ஜின், சிதம்பரத்துக்கு வரவழைக்கப்பட்டது.

பின்னர், அந்த மாற்று என்ஜின் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொருத்தப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரம் தாமதமாக இரவு 2.30 மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மேலும், மன்னார்குடி–சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் 1 மணிநேரம் தாமதமாக சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

என்ஜின் கோளாறால் 3 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதோடு, அதில் இருந்த பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.


Next Story