தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை–பழனி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்


தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை–பழனி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-06T20:12:20+05:30)

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளதாக உதவி கோட்ட மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை,

உட்காரும் இருக்கை வசதி பெட்டி

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் மணியாச்சி ரெயில்நிலையத்தில் இருந்து தூத்துக்குடி–சென்னை இணைப்பு ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த ரெயிலில் சாதாரண பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சாதாரண பொதுப்பெட்டிகளுக்கு பதிலாக 2–ம் வகுப்பு உட்காரும் இருக்கை வசதி கொண்ட பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதன்படி, குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.16127/16128) வருகிற 27–ந் தேதி முதல் உட்காரும் இருக்கை வசதி கொண்ட 2 பொதுப்பெட்டிகள் இருமார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.

தைப்பூச சிறப்பு ரெயில்

அதேபோல, பழனி முருகன் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை–பழனி இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மதுரையில் இருந்து நாளை(புதன்கிழமை) மற்றும் 9–ந் தேதி இயக்கப்படுகிறது. அதன்படி, மதுரை–பழனி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 8.30 மணிக்கு பழனி ரெயில்நிலையம் சென்றடையும்.

மற்றொரு ரெயில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு பழனி ரெயில்நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. மற்றொரு ரெயில் பழனியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே உதவி வர்த்தக மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம்

தைப்பூச சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம் குறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. பாசஞ்சர் ரெயில்களில் மதுரையில் இருந்து பழனிக்கு சாதாரண கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கும் போது இரு மடங்கு கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றனர்.


Next Story