புதிய முதல்–அமைச்சராக தேர்வு சசிகலா தேர்வை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி


புதிய முதல்–அமைச்சராக தேர்வு சசிகலா தேர்வை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2017 11:15 PM GMT (Updated: 6 Feb 2017 5:10 PM GMT)

புதிய முதல்–அமைச்சராக சசிகலாவை தேர்ந்து எடுத்ததை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அவரது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழகத்தில் ஒன்று கூடி வி.கே.சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அதைத் தொடர்ந்து முதல்–அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

வி.கே.சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 19.12.2011 அன்று கழகத்தில் இருந்தும், வீட்டில் இருந்தும் வெளியேற்றினார்.

இதன் பிறகு சசிகலா கொடுத்த மன்னிப்பு கடிதத்தில் ‘‘என்னை பொறுத்தவரையில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற–நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசையில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

இதன் பிறகு ஜெயலலிதா மீண்டும் சசிகலாவை சேர்த்தார். ஆனால், சசிகலா குடும்பத்தினர் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும் என்றே கூறியுள்ளார்.

கரும்புள்ளி

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், நீங்கள் சசிகலா சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது. அவ்வாறு செய்தால் மட்டுமே அவர் சொன்ன சொல்லிற்கு பொருள் கிடைக்கும். இல்லை என்று சொன்னால் திட்டமிட்டு ஜெயலலிதாவை ஏமாற்றி, தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார் என்று தான் நான் குற்றம் சாட்டுவேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் மக்களை நேசித்து உழைத்து தியாகம் செய்து முதல்–அமைச்சர் ஆகி உள்ளனர். ஆனால் சசிகலா எந்த தியாகமும் செய்யவில்லை. முதல்–அமைச்சர் பதவியை ஏற்பதன் மூலம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மறுபரிசீலனை

முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் எதற்காக பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு 2 முறை முதல்–அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவிற்கு அவர் துரோகம் செய்து விட்டார். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்திருக்க கூடாது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.


Next Story