சேலத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கேட்டு இளைஞர் பெருமன்றத்தினர் மனு மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்

சேலத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கேட்டு இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேவல் சண்டைசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். சேலம் மாநகர அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் 2 சண்டை சேவல்களை கொண்டு வந்திருந்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த சேவல்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் இளைஞர் பெருமன்றத்தினர் மட்டும் உள்ளே சென்று மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
அனுமதிக்க வேண்டும்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தை மாதத்தின் முதல் வாரத்தில் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி மலை அடிவாரம் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. இதில் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சேவல்களை கொண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து சேவல் சண்டையை நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூரில் சேவல் சண்டை நடத்த கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே வருகிற 19–ந் தேதி சேலத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரியும் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.