ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்: மூதாட்டியிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு


ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்: மூதாட்டியிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 6 Feb 2017 6:17 PM GMT)

ஆரணியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் நகையை பறித்து விட்டு தப்பினர்.

ஆரணி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தங்க சங்கிலி பறிப்பு

ஆரணி கொசப்பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி மண்ணம்மாள் (வயது 78). இவர் பல்வேறு வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பகல் 2–50 மணி அளவில் மண்ணம்மாள் அந்த பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோவில் தெருவிற்கும், மல்லி பிள்ளையார் கோவில் தெருவிற்கும் இடையே உள்ள குறுக்கு தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மண்ணம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

விசாரணையில், தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி சுற்றுவட்டார பகுதியில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story