விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 6 Feb 2017 6:34 PM GMT)

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் காற்றாலைகள், சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சந்தைப்படுத்தும் வகையில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் ஈங்கூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ராசிபாளையம் மற்றும் தர்மபுரி, பென்னாகரம், பாலவாடி மேலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த உயர் மின்கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அதன்படி நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவரும், கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான கொங்கு எம்.ராஜாமணி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எம்.சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், கொடிவேரி அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி, தமிழக விவசாயிகள் சங்க துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

கடும் எதிர்ப்பு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு எம்.ராஜாமணி பேசும்போது கூறியதாவது:–

தனியார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து சந்தைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் மின்தொடரமைப்பு கழகம் உயர் மின்கோபுரங்களை அமைத்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். காரணம், உயர் மின்கோபுர வழித்தடம் முழுமையாக வேளாண்மை நிலத்தில் வருகிறது. இந்த மின்கோபுரம் அமைக்கப்பட்டால் விவசாய நிலத்தில் விளைபொருட்கள் சாகுபடி செய்ய முடியாது.

தடைசெய்ய வேண்டும்

குறிப்பாக மின் வழித்தடத்தில் 80 மீட்டர் அகலத்துக்கு விவசாயம், கட்டுமானம் எதுவும் செய்ய முடியாது. நிலத்தை விற்கவும் முடியாது. சொந்த நிலத்தை இழந்துவிட்டு தவிக்க வேண்டும். எனவேதான் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்கள் அனுமதி இன்றி பல இடங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. உடனடியாக இந்த பணியை நிறுத்த வேண்டும்.

மின்கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக மின்சார கேபிள்கள் மூலம் சாலையோரத்தில் குழாய் பதித்து மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லை. மின் இழப்பும் தடுக்கப்படுகிறது. எனவே விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதை உடனடியாக தடைசெய்ய அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story