ஓசூர் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி; ரூ.30 கோடி நகை, பணம் தப்பியது


ஓசூர் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி; ரூ.30 கோடி நகை, பணம் தப்பியது
x
தினத்தந்தி 6 Feb 2017 10:00 PM GMT (Updated: 6 Feb 2017 6:56 PM GMT)

ஓசூர் அருகே வங்கிக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

ஓசூர்,

கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி பக்கமுள்ளது காமன்தொட்டி. இங்கு கிருஷ்ணகிரி– ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் காமன்தொட்டி, சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியின் மேலாளராக ஓசூரைச் சேர்ந்த சச்சிதானந்தம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை வங்கி வழக்கம் போல பூட்டப்பட்டது.

நேற்று முன்தினம் வங்கிக்கு விடுமுறையாகும். நேற்று காலை 10 மணி அளவில் வங்கியை ஊழியர்கள் திறந்தனர். அப்போது வங்கியின் லாக்கர் இருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த வங்கி மேலாளர் சச்சிதானந்தம் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் போலீசார் வங்கிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்கள்.

ரூ.30 கோடி தப்பியது

மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணையில், வங்கி கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள வெண்டிலேட்டரில் இருந்த 4 இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு மர்ம நபர்கள் அதன் வழியாக உள்ளே புகுந்ததும், அபாய ஒலி மற்றும் மின் விளக்குகளின் வயர்களை துண்டித்ததும் தெரிய வந்தது.

மேலும் வங்கியின் லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முடியாமல் போனதால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளும், பணமும் தப்பியது. இதைத் தொடர்ந்து வங்கிக்கு அருகில் உள்ள பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் பார்த்த போது நள்ளிரவு 1 மணிக்கு கொள்ளையர்கள் வந்து 1.30 மணிக்கு மின் இணைப்புகளை துண்டித்து வங்கிக்குள் புகுந்தது பதிவாகி இருந்தது.

தொடரும் சம்பவங்கள்

இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் நேற்று காலை முதல் வங்கி இயங்கவில்லை. கிருஷ்ணகிரி அருகே ராமாபுரத்தில் கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 24–ந் தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வந்த வட மாநில கொள்ளையர்கள் வங்கியின் பின்புறம் துவாரம் போட்டு உள்ளே நுழைந்தனர். அவர்கள் வங்கியின் லாக்கர்களை உடைத்து உள்ளே இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 6 ஆயிரத்து 32 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

அதில் தொடர்புடைய கொள்ளையர்களை ஒரு வருடமாக போலீசார் தேடி வட மாநிலங்களுக்கு சென்று பிடித்தனர். அதில் ரூ.5 கோடி அளவுள்ள நகைகள் மீட்கப்பட்டன. அதன் பிறகு தேன்கனிக்கோட்டை, ஓசூர் தாலுகாக்களில் கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்தன.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஓசூர் அருகே காமன்தொட்டியில் வங்கியின் வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story