குட்டியுடன் சென்ற காட்டு யானை 5 அடி பள்ளத்தில் விழுந்தது


குட்டியுடன் சென்ற காட்டு யானை 5 அடி பள்ளத்தில் விழுந்தது
x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T00:26:46+05:30)

கூடலூர் அருகே குட்டியுடன் சென்ற காட்டு யானை 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி அந்த யானையை மீட்டனர்.

பள்ளத்தில் விழுந்த யானை

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மச்சிக்கொல்லி பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய ஒரு காட்டு யானை தொடர்ந்து பிளிறிக்கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டுக்குள் முடங்கினர். காலை 7 மணி ஆகியும் காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் சத்தம் வந்த தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மின்மோட்டார் அறையை ஒட்டியுள்ள சுமார் 5 அடி பள்ளத்தில் காட்டு யானை ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்ததை பார்த்தனர். அதன் அருகே ஒரு குட்டி யானையும் சுற்றித்திரிந்தது. உடனே அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

எழுந்து நின்றது

வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். நள்ளிரவில் குட்டியுடன் அந்த தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மண்மேட்டில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக சறுக்கி பள்ளத்தில் விழுந்து இருக்கலாம் என தெரிந்தது. முதலில் அந்த யானையின் அருகே ஓடிக்கொண்டிருந்த குட்டி யானையை பிடித்து சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் கட்டினர். இதனால் அது பிளிறியவாறு இருந்தது.

பள்ளத்தில் கிடந்த காட்டு யானையை மீட்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, மண்மேட்டை தோண்டி பள்ளம் விரிவுபடுத்தப்பட்டது. கயிற்றால் காட்டு யானையின் கால்களை கட்டி பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறையினர் இழுத்தனர். இதனால் தலைகீழாக இருந்த யானை எழுந்து நின்றது.

வனப்பகுதிக்குள் சென்றது

உடனே மரத்தில் கட்டிவைத்திருந்த குட்டி யானையை அவிழ்த்துவிட்டனர். அது உற்சாகமாக தாயின் அருகில் ஓடிவந்து பால் குடித்தது. பின்னர் காட்டு யானை மெதுவாக விரிவுபடுத்திய பள்ளத்தில் இருந்து மேலே வந்து, தனது குட்டியை அழைத்துக் கொண்டு மெதுவாக அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

காட்டு யானையை 4 மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை அதிகாரிகள் பாராட்டினர். குட்டி யானை பிறந்து 2 மாதமே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story