கூடலூர் வனப்பகுதிகளில் பரவும் காட்டுத்தீ

கூடலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகலில் வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் புற்கள் கருகி வருகிறது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வனங்களில் வறட்சி நிலவுவதால் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க கூடலூர் வன கோட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, சேரம்பாடி, தேவாலா, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் அருகே புளியாம்பாரா சீனக்கொல்லி பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் பல ஏக்கரில் இருந்த புற்கள் சேதம் அடைந்தன.
வன உயிரினங்கள் கருகினநேற்று முன்தினம் இரவு கூடலூர் அருகே நாடுகாணி, பொன்னூர், பொன்வயல், தேவாலா உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு புற்கள் தீயில் எரிந்தன. மேலும் காட்டுத்தீயில் சிக்கி முயல், பாம்பு, மான்கள் உள்ளிட்ட சிறுவன உயிரினங்கள், பூச்சி இனங்கள் கருகி இறந்தன. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
இதனை பயன்படுத்தி சிலர் வனப்பகுதிக்கு தீ வைத்து விடுகின்றனர். வனத்துக்கு தீ வைப்பதால் வன உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மேலும் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் பற்றிய தகவலை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வனத்துக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.