திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T00:46:43+05:30)

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டளர்.

திருவள்ளூர்,

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டளர்.

முற்றுகை போராட்டம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சிபானம்பாக்கம், ராமன்கோவில், பிலிப்ஸ்புரம், கோவிலாம்பூண்டி, செஞ்சி மதுராகண்டிகை, வேப்பஞ்செட்டி, மடத்துக்குப்பம், சிற்றம்பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறியதாவது:–

குண்டும் குழியுமான சாலை

கடம்பத்தூர் முதல் செஞ்சிபானம்பாக்கம் மற்றும் மடத்துக்குப்பம் வரையில் ரெயில்வே இருப்பு பாதை அருகே உள்ள சாலையை 10 கிராம மக்களும் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். 3–வது மற்றும் 4–வது ரெயில்வே பாதை அமைப்பதற்காக இந்த சாலை பயன்படுத்தப்பட்டதால் இந்த சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் குண்டும் குழியுமாக மோசமாக மாறிவிட்டது.

இதனால் எங்கள் பகுதியில் இருந்து திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறோம்.

சீரமைக்க கோரிக்கை

இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதிகாரிகள், இந்த சாலையை செப்பனிட்டு கொடுக்க முடியாது. கடம்பத்தூர் முதல் செஞ்சிபானம்பாக்கம் வரையில் உள்ள சாலைக்கு பதிலாக கோவிலாம்பூண்டி வழியாக சுற்றி சாலை அமைத்து தருவதாக கூறுகிறார்கள்.

இந்த 10 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையைத்தான் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடம்பத்தூர், திருவள்ளூர் செல்வதற்கு பயன்படுத்தி வருகிறோம். கோவிலாம்பூண்டி வழியாக புதியதாக அமைக்கப்படும் சாலை சுற்றி வருவதால் பகல் மற்றும் இரவிலும் சென்று வருவதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே குண்டும் குழியுமாக உள்ள கடம்பத்தூர்–செஞ்சிபானம்பாக்கம் சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story