சுற்றுலா தலமான வால்பாறையில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை


சுற்றுலா தலமான வால்பாறையில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2017 9:45 PM GMT (Updated: 2017-02-07T01:30:58+05:30)

சுற்றுலா தலமான வால்பாறையில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வால்பாறை பகுதி என்றாலே தேயிலை தோட்டங்களும், அதிகளவில் மழை பெய்யும் இடம் என்றுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் தற்போது வால்பாறை சுற்றுலா தலம் என்றும், மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் மாற்றங்கள் செய்யப்பட்ட வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாத இறுதி வாரத்தில் கோடை விழாவும் கொண்டாடப்படுகிறது.

வால்பாறையில் 9–வது கொண்டை ஊசி வளைவு ஆழியார் அணைக்காட்சி, டைகர் பள்ளத்தாக்கு காட்சி, அப்பர் ஆழியார் அணைக்காட்சி, பாலாஜி கோவில், கருமலை வேளாங்கண்ணி திருத்தலம், கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை மற்றும் நீர்வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, நல்லமுடி பூஞ்சோலை, சித்திவிநாயகர் கோவில் என்று பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை

வால்பாறை பகுதிக்கு ஆரம்ப காலத்தில் அரசு விடுமுறை நாட்கள், கோடை விடுமுறை நாட்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படும் நாட்கள், கோடை விழா கொண்டாடப்படும் நாட்களில் மட்டும்தான் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலுமே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது வால்பாறை பகுதியில் பெரியளவிலான சுற்றுலா தலங்கள் ஏதும் இல்லாததாலும், ஒரு நாளைக்கு மேல் தங்கி சுற்றி பார்ப்பதற்கான இடவசதி ஏதும் இல்லாத நிலையிருப்பதாலும் காலையில் வரும் சுற்றுலா பயணிகள் இரவு திரும்பி சென்றுவிடுகின்றார்கள். வால்பாறைக்கு ஒரு நாள் சுற்றுலா பயணிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை

இவ்வாறு ஒரு நாள் சுற்றுலா பயணிகளாக வருபவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம், அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதற்கு தேவையான இடங்களோ, எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம் என்ற சுற்றுலா தகவல் அறிக்கை பலகைகள் என எதுவும் இல்லை. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும்போது அவர்களுக்கு உதவுவதற்கு போதிய போலீசார் இல்லை. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி இல்லை.

விடுமுறை நாட்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. வால்பாறை நகர் பகுதியில் தங்குபவர்கள் மாலை நேரங்களில் குழந்தைகளுடன் வந்து விளையாடி செல்வதற்கு அரசு பூங்கா இல்லை. நகராட்சி நிர்வாகம் சார்பில் உள்ள அண்ணா நுற்றாண்டு விழா பூங்காவும் பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது.

சுற்றுலா தலங்களில் எந்தவித மேம்பாட்டு செயல்களும் செய்யப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக அதே நிலையில் தான் இருந்து வருகிறது. ஊட்டி போன்ற பகுதிகளில் வருகின்ற கோடை விழா கொண்டாட்டம் தொடங்கி விட்டார்கள். ஆனால் வால்பாறை பகுதியில் வருகின்ற மே மாதம் கொண்டாடப்படும் கோடை விழாவிற்கான எந்தவித நடவடிக்கைகளும் இதுநாள் வரை தொடங்கப்படவில்லை.

இதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கிவிடும். இதனால் வால்பாறை பகுதியின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே வால்பாறைக்கு சுற்றுலா வருபவர்கள் வசதிக்காக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story