தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்–அமைச்சர் ஆகலாம் என்ற நிலை உள்ளது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்–அமைச்சர் ஆகலாம் என்ற நிலை உள்ளது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T01:31:34+05:30)

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்–அமைச்சர் ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

நெகமம்,

கோவை மாவட்டம் நெகமத்தில் உள்ள ஒரு தனியார் வணிகவளாக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

99 சதவீதம் பேர் ஆதரிப்பார்கள்

தமிழக மக்களின் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது, பொலிவு இருக்கிறது, தெளிவு இருக்கிறது. ஆனால் இப்போது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்து விட்டதாக எண்ணி உள்ளனர்.

தமிழகத்தில் தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோர் அரசியல் செய்துள்ளனர். ஆனால் நாட்டில் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நான் கூறும் கருத்தை 99 சதவீதம் பேர் ஆதரிப்பார்கள் என்பது உண்மை.

ஆட்சி செய்தவர்கள் சரியில்லை

பருவமழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயமும் இல்லை. மும்மாறி மழை பெய்யும் காலம்போய் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மழை பெய்யாதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் சரியில்லை. கடலில் தண்ணீர் இருப்பதற்கு பதிலாக எண்ணெய் ஓடுகிறது. தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கே.வி.கே.நடராஜன், திருப்பூர் புறநகர் மாவட்ட துணைத்தலைவர் கிட்டுச்சாமி, நெகமம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சபரிகார்த்திகேயன், கார்த்திக், கே.வி.கே.என்.செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story