லட்சத்து 9 ஆயிரத்து 619 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள்போட திட்டமிடப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்


லட்சத்து 9 ஆயிரத்து 619 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள்போட திட்டமிடப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 6 Feb 2017 8:20 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 619 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்,

தடுப்பூசி திட்ட முகாம்

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தட்டம்மை நோயை முற்றிலும் ஒழித்து தட்டம்மை இல்லாத சமுதாயத்தினை உருவாக்கிடும் நோக்கில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. தட்டம்மை, ரூபெல்லா பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுவதால் அதனை தடுக்கும் வண்ணம் முதல்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

கட்டாயம் போட வேண்டும்

இதில் கரூர் மாவட்டத்தில் 57,840 அங்கன்வாடி குழந்தைகளுக்கும், 1,50,485 பள்ளி சிறுவர்களுக்கும், 1,294 பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 619 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு 1,078 அங்கன்வாடி மையங்களும், அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 1,014 பள்ளிகளிலும் இத்தடுப்பூசி திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது குழந்தைகளை படிக்கும் பள்ளிகளிலோ, அங்கன்வாடி மையங்களுக்கோ சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க தடுப்பூசிகளை அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மருத்துவத்துறை இணை இயக்குனர் ராம்ராஜ், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நளினி, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story