3 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் கலெக்டர் தகவல்


3 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 6 Feb 2017 8:20 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

புதுககோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டார்.

3 லட்சத்து 91 ஆயிரத்து 562 பேருக்கு...

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தட்டம்மை, ரூபெல்லா ஆகிய இரு நோய்களுக்கான தடுப்பூசி தமிழக அரசின் மூலம் இலவசமாக போடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 9 மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதுடைய சிறுவர்கள் வரை மொத்தம் 3 லட்சத்து 91 ஆயிரத்து 562 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாவட்டத்தில் 1,573 பள்ளிகளும், 1,272 அங்கன்வாடி மையங்களும், 20 நடமாடும் மருத்துவக்குழுக்களும் தடுப்பூசி வழங்கிடும் மையங்களாக செயல்பட உள்ளன என்றார்.

இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணீ தரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் சம்சாத்பேகம், நகராட்சி ஆணையர் சுப்ரமணியன், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் ஜெயசீலன், நகர்நல அலுவலர் விஜயகுமார், மண்டல பொது சுகாதார பயிற்சி நிலைய முதல்வர் ஜெயசீலன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story