குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது


குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-07T01:51:36+05:30)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது.

பெரம்பலூர்,

குழந்தைகளுக்கு தடுப்பூசி

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முகாம் மூலமாக 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 503 பள்ளிகளிலும், 490 அங்கன்வாடி மையங்களிலும், 90 துணை சுகாதார நிலையங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களாக தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மருத்துவர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 247 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. 116 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சம்பத் மற்றும் மருத்துவர்கள் அரவிந்தன், விஜய் ஆனந்த், தினேஷ், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 9 மாத குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இன்று (நேற்று) முதல் வருகிற 28-ந்தேதி வரை தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு

அரியலூர் மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி 1,296 மையங்கள் மற்றும் 5 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் போடப்படுகிறது. இந்த பணிகளில் 836 மருத்துவ பணியாளர்கள், 2 ஆயிரத்து 592 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 701 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகளுக்கு நிமோனியா, வயிற்றுப்போக்கு, கருவிழி பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது 9 மாத குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதார துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் கல்வி, சுகாதார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உட்கோட்டை, அய்யப்பநாயக்கன் பேட்டை, உடையார்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 12 மையங்களில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் திருமாறன், வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் தீபா, நகராட்சி மேலாளர் துரைராஜ், பணி மேற்பார்வையாளர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம சுகாதார செவிலியர் மனோன்மணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் சுகாதார ஆய்வாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார். 

Next Story