9-ம் வகுப்பு மாணவனை காரில் கடத்திய மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி சாலையில் வீசி சென்றனர்


9-ம் வகுப்பு மாணவனை காரில் கடத்திய மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி சாலையில் வீசி சென்றனர்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-07T01:52:15+05:30)

நாகர்கோவில் அருகே 9-ம் வகுப்பு மாணவனை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

9-ம் வகுப்பு மாணவன்

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவரின் மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

அந்த மாணவன் அருகில் உறவினர் வீட்டுக்கு டியூசன் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு டியூசனுக்கு சென்ற மாணவன் இரவில் அங்கேயே தங்கினான். நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டான். என்.ஜி.ஓ.காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.

காரில் கடத்தல்

அந்த கார், மாணவனின் அருகே வந்ததும் சட்டென நின்றது. அதில் இருந்து 2 வாலிபர்கள் கீழே இறங்கினர். அவர்கள் மாணவனின் சட்டையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினர். பின்னர் அவர்களும் காரில் ஏறிக்கொள்ள கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.

காருக்குள் இருந்தவர்கள் அந்த மாணவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவனது கழுத்தையும் நெரித்து கொல்ல முயன்றனர்.

சாலையில் வீச்சு

அப்போது காரில் இருந்தவர்களில் ஒருவரின் செல்போன் ஒலித்தது. அதை எடுத்து பேசியவர்கள் உடனே காரை நிறுத்தினர். பின்னர் காரில் கடத்தி வரப்பட்ட மாணவனை சாலையில் வீசிவிட்டு தப்பிசென்று விட்டனர்.

படுகாயங்களுடன் சாலையில் விழுந்த மாணவன், அழுது கொண்டே நின்றான். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள், மாணவனை மீட்டு அவனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

வடமாநில கும்பல்

உறவினர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி மாணவனின் பெற்றோர், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தியபோது, கடத்தி சென்றவர்கள் இந்தியில் பேசியதாகவும், அவர்கள் வட மாநில கும்பலை போல் இருந்ததாகவும் கூறினான்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கன்னியாகுமரி உதவி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கடத்தல்காரர்களின் கார் பதிவாகி உள்ளதா?, அவர்கள் யார்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டார்கள்?, என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story