ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-07T01:52:18+05:30)

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

மீனவர்கள் குடும்பத்தினர்

இந்திய புலம்பெயர்ந்தோர் அமைப்பு மக்கள் தேசிய உள்நாட்டு தொழிலாளர்கள் இயக்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சுகுந்தலா, மேரி ஏஞ்சல் உள்ளிட்டோர் தலைமையில், ஈரான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமின்போது கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த எட்வின் சுபின் (வயது 40), கேசவன்புத்தன் துறையைச் சேர்ந்த ஆரோக்கிய தினேஷ் (30), ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த பிரவின் (29), ரோஜோஸ் (26), சுகாய சுதர்சிங் (24) ஆகிய 5 மீனவர்களும் சவூதி நாட்டில் மீன் பிடிக்கும் தொழிலுக்காக சென்றிருந்தனர்.

மீட்க நடவடிக்கை

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது எல்லை தாண்டியதாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு ஈரானில் உள்ள பஜ்ஜர் சிறையில் 72 நாட்கள் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தற்போது பந்தரா ரெஸ்தனி என்ற இடத்தில் உள்ள துறைமுகத்தில் லாஞ்சியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்த பெண்களில் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

குடிநீர் ஆதாரம்

மாங்கோடு ஊராட்சி பாக்கோடு பகுதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மாங்கோடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தால் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் கேரளாவுக்கும், வெளியூர்களுக்கும் எடுத்துச் செல்வதால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் உள்ளது. இதுதொடர்பாக கடந்த 2013–ம் ஆண்டு ஊர் மக்கள் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகிறார்கள். ஆகவே உடனடியாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை ஆலையை தடை செய்து கிணறுகளில் குடிநீர் ஆதாரத்தை நிலைநிறுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனிவார்டாக மாற்ற வேண்டும்

நாகர்கோவில் வடசேரி மேலகலுங்கடியை சேர்ந்த மாவட்ட ஆதிதிராவிடர் குழு உறுப்பினர் மாரியம்மாள் தலைமையில் பெண்கள் பலர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியாகும். எங்கள் பகுதிதான் காலம், காலமாக தனி வார்டாக ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தனி வார்டாக இல்லாமல், பக்கத்து வார்டான 7–வது வார்டு தனி வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரும் பிரச்சினையாக உள்ளது. எங்கள் சமுதாயத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் எங்கள் பகுதியை ஒதுக்குகின்றனர். எனவே தனிவார்டு வார்டு கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரில் மனு கொடுத்தோம். அப்போது பல தகவல்கள் கேட்டிருந்தீர்கள்.

எனவே இந்த மனுவை ஏற்றுக்கொண்டு எங்கள் வார்டு வாக்காளர்கள், மொத்த ஆண், பெண் ஜனத்தொகை அனைத்தும் இந்த மனுவுடன் இணைத்துள்ளோம். இதை ஏற்று எங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு தனி வார்டு ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story