துமகூருவில் செயல்படுத்தப்படுகிறது சூரிய சக்தி மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்


துமகூருவில் செயல்படுத்தப்படுகிறது சூரிய சக்தி மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2017 8:24 PM GMT (Updated: 2017-02-07T01:54:50+05:30)

துமகூருவில் சூரிய சக்தி மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

“துமகூருவில் சூரிய சக்தி மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்தார்.

கவர்னர் வஜூபாய் வாலா தனது உரையில் கூறியதாவது:-

ஒரு கோடி குடும்பங்கள்

“மாநிலத்தில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் அன்ன பாக்யா திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதம் முதல் இவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பருப்பு வகைகள் ஒரு கிலோ வழங்கப்படும்.

“பெங்களூரு ஒன்“ மையம் மூலம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடை வழங்கவும், கோவில் நகரங்களில் தங்குவதற்கு முன்பதிவு செய்வதற்கும் இணையதளம் மூலம் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

குடிசைகள் இல்லாத மாநிலம்

கர்நாடகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவது இந்த அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 3 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2013-14 முதல் இதுவரை 10.42 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மாநிலத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் துமகூரு மாவட்டம் பாவகடாவில் சூரியசக்தி மின் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிரந்தர ஜோதி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு மின் வசதி, மற்றும் பாசனத்திற்காக உறுதி அளிக்கப்பட்ட மின் வசதி வழங்கும் திட்டம் 129 தாலுகாக்களில் விரைவில் நிறைவடைய உள்ளது.

ரெயில் பெட்டி தொழிற்சாலை

மாநிலத்தில் ரெயில் மற்றும் விமான சேவைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்படி கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் 2-வது விமான ஓடுபாதை, மற்றும் 2-வது முனைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் பெலகாவி மற்றும் உப்பள்ளியில் விமான நிலையங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கலபுரகியில் விமானநிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ரெயில்வே துறையுடன் செலவுகளை பங்கிட்டு கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பல்வேறு ரெயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதோடு ரெயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களையும் இலவசமாக வழங்குகிறோம். இதன்படி 10 பிரதான ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் யாதகிரியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.“

இவ்வாறு அவர் கூறினாளர். 

Next Story