கிராமப்புற வளர்ச்சிக்காக நம்ம கிராமம் திட்டம் கவர்னர் உரையில் அறிவிப்பு


கிராமப்புற வளர்ச்சிக்காக நம்ம கிராமம் திட்டம் கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2017 8:34 PM GMT (Updated: 6 Feb 2017 8:34 PM GMT)

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா நேற்று உரையாற்றினார்.

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா நேற்று உரையாற்றினார். அப்போது விண்ணப்பித்த ஒருவார காலத்திற்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும், கிராமப்புற வளர்ச்சிக்காக நம்ம கிராமம் திட்டம், மாநிலத்தில் ரெயில்-விமான சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் 6-ந் தேதி(நேற்று) தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

கவர்னர் வஜூபாய் வாலா உரை

அதன்படி கர்நாடக சட்டசபை நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். முன்னதாக காலை 10..55 மணிக்கு விதான சவுதாவுக்கு வந்த கவர்னரை முதல்-மந்திரி சித்தராமையா, மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி, சபாநாயகர் கே.பி.கோலிவாட் உள்ளிட்டோர் வரவேற்று சபை அரங்கத்திற்குள் அழைத்து வந்தனர்.

சட்டசபை கூட்டத்தில் கவர்னர் பேசியதாவது:-

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காவிரி மற்றும் மகதாயி நதி நீர் பிரச்சினைகளில் கோர்ட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், நமது உரிமையை காக்க கர்நாடக அரசு மக்களின் பக்கம் உறுதியாக நின்றது.

உரிமையை மீட்க...

காவிரி, கிருஷ்ணா, மகதாயி நதி நீர் பிரச்சினைகளில் கர்நாடக மக்களின் உரிமையை மீட்க மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுத்தது. இடையிடையில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஊழலுக்கு எதிரான கண்காணிப்பை பலப்படுத்த, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த நம்பகமான நிர்வாகத்தை வழங்க கர்நாடக அரசு ஊழல் தடுப்பு படையை உருவாக்கியுள்ளது. இந்த படையினர் குறுகிய காலத்தில் 3,401 புகார்களில் 2,294 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் ஊழல் கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

8,585 போலீசார் நியமனம்

போலீஸ் துறையை நவீனப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் புதியதாக 8 ஆயிரத்து 585 போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மொத்தத்தில் பல்வேறு படிகளில் ரூ.2,000 உயர்த்தியுள்ளது. குறித்த காலத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டல ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய ஐதராபாத்-கர்நாடக பகுதியை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐதராபாத்-கர்நாடக பகுதியில் உள்ள அரசு வேலை வாய்ப்புகள் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 12 ஆயிரத்து 326 பணி இடங்கள் ஏற்கனவே வேலை செய்பவர்கள் மூலமும், நேரடி நியமனம் மூலம் 13 ஆயிரத்து 135 பணி இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 160 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளது.

கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் கொடுத்து அவர்களுக்கு குறித்த காலத்தில் அரசு உதவி செய்து வருகிறது. கடந்த காலங்களில் வறட்சியை மாநில அரசு சிறப்பான முறையில் நிர்வகித்தது. இப்போதும் அதே போல் வறட்சியை நிர்வகித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், கால்நடைகளுக்கு தீவனம் வழங்குதல், கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.1,195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்ணீரை பாதுகாத்தல் மற்றும் தண்ணீரை தேக்கும் குளங்களை நிர்வகிப்பது போன்றவற்றின் மூலம் வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இந்த பணிகளை அரசு செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 924 கோடி செலவில் 921 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டம், குளங்கள் அமைத்தல், தடுப்பணைகளை அமைத்தல் போன்றவற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது சகாலா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

கடன் மீதான வட்டி தள்ளுபடி

காரீப் பருவத்தில் 10.5 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதற்காக ரூ.675 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன் மீதான வட்டியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் 2.25 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு உதவ வெங்காயம், கொப்பரை தேங்காய், துவரம் பருப்பு மற்றும் நெல் போன்றவற்றை விவசாயிகளிடம் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளது. வேளாண்மை விளைபொருட்கள் சந்தைகளில் கர்நாடக அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. மேலும் இதே மாதிரியான சீர்திருத்தத்தை மத்திய வேளாண்மை விளைபொருட்கள் சந்தையில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் மூலமாக வர்த்தகம்

மாநிலத்தில் 156 வேளாண்மை விளைபொருட்கள் சந்தையில் ஆன்லைன் மூலமாக வர்த்தகம் நடைபெறுகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தையில் போட்டி உருவாகுவதால் விவசாயிகளுக்கு விலை அதிகமாக கிடைக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

கால்நடைகளுக்கு நோய்கள் பரவுவதை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டன. 3.62 லட்சம் குடும்பங்கள் கால்நடை காப்பீட்டு வசதிகளை பெற்றுள்ளன. விபத்துகளில் உயிரிந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்காக “நம்ம கிராமம் நம்ம யோஜனா“ என்ற புதிய திட்டம் நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

இரங்கல் தீர்மானம்

உரையை வாசித்து முடித்ததும் கவர்னர் அங்கிருந்து விடைபெற்று சென்றார். அவரை முதல்-மந்திரி, மேல்-சபை தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கவர்னர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தார். அவர் எழுந்து நின்றபடி உரையாற்றினார். கவர்னரின் இருக்கைக்கு இருபுறமும் மேல்-சபை தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

கவர்னர் சுமார் 1 மணி நேரம் உரையை வாசித்தார். அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் சபை கூடியபோது முன்னாள் மந்திரி மகாதேவ பிரசாத் உள்பட சட்டசபையின் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு விதான சவுதாவில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Next Story