தஞ்சையில் தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி முகாம் கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

தஞ்சையில் தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தட்டம்மை தடுப்பூசி பணி
தஞ்சை மாவட்டத்தில் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்கவிழா தஞ்சை மருத்துவகல்லூரி சாலை தேவன்நகரில் உள்ள ஒரு தனியார் தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 327 குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. வைரஸ் மூலம் வரக்கூடிய தட்டம்மை, ஜெர்மானிய மணல்வாரி என்று அழைக்கப்படும் ரூபெல்லா என்ற நோய் காற்றின் மூலம் பரவும் தொற்றுநோயாகும். கருவுற்ற பெண்களை ரூபெல்லா தாக்கும்போது கருவில் இருக்கும் குழந்தைகள் இருதயம், கண்பாதிப்பு, காதுகேளாமை போன்ற பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த தடுப்பூசி 15 வயது வரை உள்ள அனைவருக்கும் போடப்பட உள்ளது.
28–ந் தேதி வரைஅரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கிராம சுகாதார செவிலியர்களால் டாக்டர்களின் மேற்பார்வையில் 1 நாளைக்கு 1,000 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும். பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் கிராம சுகாதார செவிலியர்களால் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணி வருகிற 28–ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, தஞ்சை மாநகர் நல அலுவலர் செந்தில்குமார், டாக்டர் சிங்காரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.