பிரதாபராமபுரம் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம் கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


பிரதாபராமபுரம் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம் கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2017 9:44 PM GMT (Updated: 2017-02-07T03:14:37+05:30)

பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணி,

தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 28–ந்தேதி வரை நமது மாநிலத்தில் உள்ள 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியில் தட்டம்மை, ரூபெல்லா என்ற 2 கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற கூடிய தடுப்பு மருந்து உள்ளது. தட்டம்மை நோயினால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு மற்றும் நிமோனியா ஆகிய பாதிப்புகள் உண்டாகிறது. வைட்டமின் “ஏ“ குறைபாடு ஏற்பட்டு குழந்தைக்கு மாலை கண் நோய் மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்புகளை குறைக்க தமிழகத்தில் தட்டம்மை தடுப்பூசி 1995–ம் ஆண்டு முதல் 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. 2011–ம் ஆண்டு முதல் 2–ம் தவணை ஊக்குவிப்பு தடுப்பூசி 16 மாத குழந்தைகள் முதல் 24 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

பக்க விளைவுகள் கிடையாது

இதுநாள் வரை எந்த பக்க விளைவுகளோ, எதிர் விளைவுகளோ இல்லை. ரூபெல்லா நோய் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், மேலும் பிறக்கும் குழந்தைகள் கண் புரை, க்ளாகோமா, காது கேளாமை, மூளை வளர்ச்சி குறைபாடு, சிறிய தலை மற்றும் இருதய நோய் போன்ற குறைபாடுகளுடன் பிறக்கலாம். எனவே தான் தமிழக அரசு நாம் ஏற்கனவே வழங்கிவரும் தட்டம்மை தடுப்பூசியுடன் ரூபெல்லா தடுப்பூசியையும் இணைத்து தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசியாக வழங்கி வருகிறது. இந்த தடுப்பூசிகள் 100 சதவீகிதம் பாதுகாப்பானது. எனவே பொது மக்கள் அனைவரும் தமிழக அரசின் உயரிய நோக்கத்தை உணர்ந்து எந்த வீண் வதந்திகளையும் நம்பாமல், தங்களது குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகளை போட்டு, 2 கொடிய நோய்களில் இருந்து தமிழகத்தின் வருங்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) விஜயலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆஷா கிறிஸ்டி, தாசில்தார் மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, சேகர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூவைவரதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story