நீர்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்


நீர்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:13 PM GMT (Updated: 6 Feb 2017 10:13 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் வகையில், கீரியாறு நீர்தேக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவில்பட்டி,

விவசாயிகள் சங்க கூட்டம்

கோவில்பட்டி– மந்திதோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் செல்லமுத்து, பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில மகளிர் அணி தலைவி ராஜரீகா, பாலசுப்பிரமணியன், தம்பை சண்முகம், பொன் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நதிகளை இணைக்க...

வறட்சியின் கொடுமை தாங்காமல் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வறட்சி நிவாரண தொகையை அரசு ஏக்கருக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கீரியாறு நீர்தேக்க திட்டம்

கடந்த ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக உடனே வழங்க வேண்டும், அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி அவற்றை இணைக்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,

பம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசையும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசையும் கண்டிப்பது, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் கீரியாறு நீர்த்தேக்க திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு அஞ்சலி

முன்னதாக வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.


Next Story