தென்திருப்பேரை கைலாசநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தென்திருப்பேரை கைலாசநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:23 PM GMT (Updated: 6 Feb 2017 10:23 PM GMT)

தென்திருப்பேரை கைலாசநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை,

கைலாசநாதர் சுவாமி கோவில்

நவ கைலாயங்களில் 7–வது தலமாக தென்திருப்பேரை அழகிய பொன்னம்மை உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி புதன் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்த பழமைவாய்ந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது.

தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 4–ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் விக்னேசுவர பூஜை, 4–ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள், கடம் எழுந்தருளல் நடந்தன.

கும்பாபிஷேகம்

காலை 9.55 மணிக்கு கோவில் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி– அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அலுவலர்கள் அஜித், சிவராம் பிரபு, டி.வி.எஸ். அறக்கட்டளை தலைமை மேலாளர் ரங்கநாதன், பொறியாளர்கள் செல்வம், சுப்பு, சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story