வழிப்பறி கொள்ளையை தடுக்க வெள்ளிமலையில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்


வழிப்பறி கொள்ளையை தடுக்க வெள்ளிமலையில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Feb 2017 11:29 PM GMT (Updated: 6 Feb 2017 11:29 PM GMT)

வெள்ளிமலையில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே வழிப்பறி கொள்ளையை தடுக்க வெள்ளிமலையில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார்.

புறக்காவல் நிலையம்

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டை கீழநத்ததில் இருந்து மணப்படை வீடு கிராமத்துக்கு வருகிற வழிப்பாதையில் சீமைகருவேல முட்செடிகள் அதிக அளவில் உள்ளன. இதை பயன்படுத்தி அந்த வழியாக வருகிறவர்களிடம் மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி நகை–பணத்தை பறித்து சென்றுவிடுகிறார்கள். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்து, போலீசார் வருதற்குள் குற்றவாளிகள் தப்பி சென்றுவிடுகிறார்கள். எனவே பாளையங்கோட்டை அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புறகாவல்நிலையம் அமைக்கவேண்டும், என்று கூறி உள்ளனர்.

மீனவர்களை மீட்க..

நாம்தமிழர் கட்சியினர், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த டிசம்பர் மாதம் மீன் பிடிக்க சென்ற ராதாபுரம் பகுதி மீனவர்களை 20–10–2016 அன்று ஈரான் நாட்டு கடற்படையினர் பிடித்து சிறை வைத்து உள்ளனர். அவர்கள் உணவு, உடை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் 100 நாட்களாக சிறைபிடித்து வைத்திருப்பதால், அவர்களுடைய குடும்பத்தினர் சிரமப்படுகிறார்கள். எனவே அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

திருநங்கைகள் புகார்

நெல்லையை சேர்ந்த திருநங்கைகள் விஜி, காயத்திரி, ஜமுனா, அகல்யா, பானு, வந்தனா, பவானி, ரோகிணி உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை வண்ணார்பேட்டை பை–பாஸ் ரோட்டில் இரவு நேரத்தில் சில திருநங்கைகள் நின்று கொண்டு வழிப்பறியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து திருநங்கைகளுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது எனவே வண்ணார்பேட்டை பை–பாஸ் ரோட்டில் இரவு நேரத்தில் நிற்கின்ற திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

மின்பஸ்களை...

களக்காடு பத்மநேரி பகுதிமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து களக்காட்டில் இருந்து மேலச்சடைமான்குளம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினிபஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளன. நிறுத்தப்பட்ட மினிபஸ்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரம் கிராம மக்கள் அரிச்சந்திரன், செல்வபாலன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு செல்கின்ற பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று கூறி உள்ளனர்.

100நாள் வேலை

நாஞ்சான்குளம் கிராம மக்கள் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் நடைபெறுகின்ற 100 நாள் வேலை தற்போது எங்கள் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த வேலையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு கொடுத்தனர்.


Next Story