பல்வேறு இடங்களில் போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


பல்வேறு இடங்களில் போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2017 9:00 PM GMT (Updated: 2017-02-07T18:06:22+05:30)

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று தமிழகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில் நேற்று காலையில் நடந்த போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கையை வற்புறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடர்ந்து அனைவரும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தென்காசி–செங்கோட்டை


தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் அயுப்கான், மாதர் சங்க தலைவி சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான பெண்கள் உள்பட மொத்தம் 655 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுமயில், தாலுகா குழு உறுப்பினர் கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிலாளர்கள் சங்க வட்டார செயலாளர் முத்துசாமி, வட்டார நிர்வாகி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் தம்பித்துரை, வட்டார கமிட்டி உறுப்பினர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 149 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாவூர்சத்திரம்–ஆழ்வார்குறிச்சி

பாவூர்சத்திரத்தில் நெல்லை– தென்காசி மெயின்ரோட்டில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் தங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். கமிட்டி உறுப்பினர்கள் சண்முகம், சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் 378 பெண்கள் உள்பட 408 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் பாவூர்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்குறிச்சி பஸ்நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு பிரிவு முத்துராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்–திருவேங்கடம்

சங்கரன்கோவிலில் பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்துக்கு, வட்டார செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சைலஜா, ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் உச்சிமாகாளி, தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சங்க நிர்வாகிகள் குமார், தங்கராஜ், லட்சுமி உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டவர்களை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடத்தில் நடந்த போராட்டத்துக்கு, தாலுகா செயலாளர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். ஜெயராஜ், நல்லசாமி, தாலுகா குழு உறுப்பினர் மணி, வேணுகோபால், கருப்பசாமி உள்பட 100–க்கும் மேற்பட்டவர்களை திருவேங்கடம் போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூர்–நாங்குநேரி

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த சாலை மறியலில் பங்கேற்ற 35 பெண்கள் உள்பட 93 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாங்குநேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் பகுதிக்கு சென்று அங்கு மறியல் செய்யப் போவதாக அறிவித்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 400 பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story