முக்கூடல் அருகே பயங்கரம் மகனை கிணற்றில் வீசி கொன்று விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


முக்கூடல் அருகே பயங்கரம் மகனை கிணற்றில் வீசி கொன்று விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2017 8:00 PM GMT (Updated: 2017-02-07T20:58:03+05:30)

முக்கூடல் அருகே மகனை கிணற்றில் வீசி கொண்டு விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முக்கூடல்,

முக்கூடல் அருகே மகனை கிணற்றில் வீசி கொண்டு விட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிணற்றில் பிணம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ளது கலியன்குளம் கிராமம். இங்கு காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் உடல் மிதந்தது. அந்த கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணமும் தொங்கிக் கொண்டு இருந்தது. நேற்று காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இதுகுறித்து உடனடியாக முக்கூடல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 பின்னர் இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்ற மகனை தந்தையே கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தந்தை–மகன்

முக்கூடல் அருகே உள்ள கலியன்குளத்தை சேர்ந்த முப்பிடாதி மகன் பிரேஷ்நேவ் (வயது 35) விவசாயி. இவருக்கும் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த அனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுடைய மகன் பிரவீன் (5). இவன் கல்யாணிபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.

பிரேஷ்நேவுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரேஷ்நேவ் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேஷ்நேவ் மதுகுடிக்க தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேஷ்நேவ் விரக்தி அடைந்து காணப்பட்டார்.

கிணற்றில் வீசினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேஷ்நேவ் கல்யாணிபுரத்திற்கு சென்றார். அங்கு பள்ளிக்கூடத்தில் இருந்த தனது மகன் பிரவீனை அழைத்து, கலியன்குளத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தார். ஏற்கனவே மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியில் இருந்த பிரேஷ்நேவ் பெற்ற மகன் என்றும் பார்க்காமல் அருகில் உள்ள கிணற்றில் அவனை தூக்கிச் வீசினார். இதில் தண்ணீர் மூச்சுத் திணறிய பிரவீன் பரிதாபமாக இறந்தான். பின்னர் அருகில் உள்ள மரத்தில் பிரேஷ்நேவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தந்தை–மகன் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் அழுதது பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்ற மகனை கிணற்றில் வீசிக் கொன்று தந்தையும் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story