ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம்


ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 Feb 2017 7:30 PM GMT (Updated: 7 Feb 2017 4:19 PM GMT)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாசி திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7.45 மணி அளவில் நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

15–ந் தேதி தேரோட்டம்

விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

5–ம் திருநாளான வருகிற 11–ந் தேதி (சனிக்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது. 9–ம் திருநாளான 15–ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.

10–ம் திருநாளான 16–ந்தேதி இரவில் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 11–ம் திருநாள் இரவில் நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியார்கள் தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 12–ம் திருநாளான 18–ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

Next Story