தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது


தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
x
தினத்தந்தி 7 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-08T02:46:16+05:30)

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

வலைகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக குட்டிக்கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். அத்துடன், சில விசைப் படகுகளுக்குள் இறங்கி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலுக்குள் வீசி எறிந்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த கான்ஸ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் அத்தனாஸ் (வயது 52), அருண்ஜார்ஜ் (28), முத்துமுருகன் (27), செல்வம் (30), அர்ச்சுனன் (45), அந்தோணி எடிசன் (26), அருண் (28), ராசு (45), முனியசாமி (35), கிளாரென் (29) ஆகிய 10 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படைத்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு பின் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் மீனவர்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story