கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்: கோவையில் இருந்து 7,500 லாரிகள் கேரளாவுக்கு செல்ல வில்லை


கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்: கோவையில் இருந்து 7,500 லாரிகள் கேரளாவுக்கு செல்ல வில்லை
x
தினத்தந்தி 7 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-08T03:19:44+05:30)

கேரளாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் இருந்து 7,500 லாரிகள் கேரளாவுக்கு செல்ல வில்லை.

கேரளாவில் வேலைநிறுத்தம்

வாகனப்பதிவு கட்டணம் முன்பு இருந்ததைவிட பலமடங்கு உயர்த்தப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை ஒழிப்பதற்கான மத்திய அரசின் சட்டத்தை கைவிடுவதுடன், எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் முறையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளாவில் நேற்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் நேற்று ஏராளமான லாரிகள் ஓடவில்லை. கேரள லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு கோவை லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகளும் நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இயக்கப்பட வில்லை.

வாளையாறு சோதனைச்சாவடி

கோவை மாநகர பகுதியில் உள்ள லாரிகள் அனைத்தும் உக்கடம் லாரிப்பேட்டையில் நிறுத்தி வைக் கப்பட்டு இருந்தது. மற்ற பகுதிகளில் உள்ள லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று பிற மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் தமிழக–கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி அருகே ரோட்டின் இருபுறத்திலும் நீண்ட தூரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கோவை மாவட்ட லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:–

7,500 லாரிகள்

கோவை மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் லாரிகள் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதில் 7,500 லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படுகிறது. முக்கியமாக கோவையில் இருந்து பால், காய்கறிகள், பழங்கள், மோட்டார் பம்புகள் உள்பட பல்வேறு பொருட்கள் கேரளாவுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

கேரளாவில் நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளா செல்லும் 7,500 லாரிகள் இயக்கப்படவில்லை. ஆனால் கோவையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் லாரிகள் வழக்கம்போல சென்று வந்தன. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கோவையில் இருந்து அனைத்து லாரி களும் கேரளாவுக்கு இயக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story