கூடலூர் அருகே 30 அடி ஆழ கிணற்றில் சிறுத்தைப்புலி தவறி விழுந்தது


கூடலூர் அருகே 30 அடி ஆழ கிணற்றில் சிறுத்தைப்புலி தவறி விழுந்தது
x
தினத்தந்தி 7 Feb 2017 10:15 PM GMT (Updated: 7 Feb 2017 10:09 PM GMT)

கூடலூர் அருகே 30 அடி ஆழ கிணற்றில் சிறுத்தைப்புலி தவறி விழுந்தது. அதை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

சிறுத்தைப்புலி தவறி விழுந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு கல்லீங்கரை 4–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சன்னிதாமஸ். இவருடைய தேயிலை தோட்டத்தில் சுமார் 30 அடி ஆழ தரைக்கிணறு உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு சன்னிதாமஸ் தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தரைக்கிணற்றில் இருந்து உறுமல் சத்தம் வந்தது.

இதனால் கிணற்றின் உள்ளே அவர் எட்டி பார்த்தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் கூடலூர் கோட்ட வன அலுவலர் திலீப், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு, வனச்சரகர்கள் கணேசன், ராஜேந்திரன், வனவர் செல்லதுரை, போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் ரகீம், ஆனந்த் மற்றும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றுக்குள் ஏணியை இறக்கினர்

அவர்கள், 30 அடி ஆழ கிணற்றில் விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த சிறுத்தைப்புலியை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர். பின்னர் மூங்கில்களால் வடிவமைக்கப்பட்ட ஏணி கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. அதன் வழியாக சிறுத்தைப்புலி வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகல் 11 மணி வரை சிறுத்தைப்புலி வெளியே வரவில்லை.

இதையடுத்து கூடலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படையினருக்கு சொந்தமான இரும்பு ஏணி கிணற்றுக்குள் இறக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிணற்றின் மேற்புறம் வலை விரிக்கப்பட்டது. கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி விழுந்த தகவல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

அப்போது கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை வெளியே கொண்டு வருவதற்கு பதிலாக கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

மீட்க முடியவில்லை

பின்னர் தேயிலை தோட்டத்தை விட்டு பொதுமக்களை வெளியே செல்லுமாறு போலீசார் அறிவுறுத் தினர். இதையடுத்து கிணற்றுக்குள் இறக்கி வைத்துள்ள ஏணி வழியாக சிறுத்தைப்புலி வெளியே வரும் என நேற்று இரவு 8 மணி வரை வனத்துறை மற்றும் போலீசார் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப் புலி வெளியே வர வில்லை. சுமார் 14 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் சிறுத்தைப் புலியை மீட்க முடியாததால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்தது 5 வயதான சிறுத்தைப்புலியாகும். மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் சிறுத்தைப்புலி கிணற்றை விட்டு வெளியே வராது. இதனால் கிணற்றுக்குள் ஏணி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் சிறுத்தைப்புலி கிணற்றை விட்டு வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டு உள்ளது. கிணற்றில் இருந்து சிறுத்தைப்புலி வெளியே வரவில்லை என்றால் மருத்துவ குழுவினர் உதவியுடன் சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் மச்சிக்கொல்லி பகுதியில் காட்டு யானை பள்ளத்தில் விழுந்து தவித்த நிலையில் பல மணி நேர பேராட்டத்துக்கு பிறகு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி தவறி விழுந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story