தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.500 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனை பாதிப்பு


தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.500 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2017 11:00 PM GMT (Updated: 28 Feb 2017 3:11 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.500 கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தர்மபுரி,

வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தனியார் வங்கிகளை சேர்ந்த ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதையொட்டி தர்மபுரி ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் ரமேஷ், துணைத்தலைவர் முத்துக்குமரன், வங்கி ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் சந்திரசேகர், நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதேபோல் இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் கலியுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, பழனிவேலு, சந்துரு, சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

வரி விதிக்ககூடாது

இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கி பணிகளில் அவுட்சோர்சிங் முறையை முழுமையாக கைவிட வேண்டும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கு வருமான வரி விதிக்க கூடாது. தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்த கூடாது. பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கிகளில் கூடுதல் நேரம் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் நேரப்பணிக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளை சேர்ந்த 1000–த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதன் காரணமாக நேற்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகளில் வழக்கமான பணபரிவர்த்தனை மற்றும் பிற பணிகள் பாதிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒருநாளில் ரூ.500 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story