தடுப்பு சுவரில் கார் மோதி பனியன் கம்பெனி உரிமையாளர் சாவு


தடுப்பு சுவரில் கார் மோதி பனியன் கம்பெனி உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 1 March 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் கம்பெனி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

பனியன் கம்பெனி உரிமையாளர்

திருப்பூர் கருமாரப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). பனியன் கம்பெனி உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த அவர்களுடைய உறவினர்கள் தியாகராஜன் (33), ராஜேந்திரன் (42). இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள மாயவனம் கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிட சென்றனர்.

கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கருமாரப்பாளையத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (35) என்பவர் ஓட்டினார். காரின் பின் இருக்கையில் சண்முகம் உட்கார்ந்திருந்தார்.

சாவு

கெட்டிச்செவியூர் அருகே உள்ள வளைவில் கார் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பின் இருக்கையில் இருந்த சண்முகத்தின் தலை கார் கதவின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த தியாகராஜன், ராஜேந்திரன் ஆகியோரும் காயம் அடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் தியாகராஜன், ராஜேந்திரன் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாய் குறுக்கே ஓடியது

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (33). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி கோபியில் இருந்து கணபதிபாளையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கலிங்கியம் அருகே சென்றபோது அவருடைய மொபட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதில் நிலைதடுமாறிய அவர் ரோட்டில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கருப்புசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story