ஈரோடு பழையபாளையத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை


ஈரோடு பழையபாளையத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 11:20 PM GMT)

ஈரோடு பழையபாளையத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்தது. மருத்துவமனையில் இருந்த பணம் திருட்டு போனது.

வணிக வளாகம்

ஈரோடு பழையபாளையம் பெருந்துறைரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் கீழ் தளத்தில் 6 கடைகளும், முதல் தளத்தில் 6 கடைகளும் உள்ளன. முதல் தளத்தில் 2 நிதி நிறுவனங்கள், ஜவுளிக்கடை, விளம்பர ஏஜென்சி அலுவலகம், பல் மருத்துவமனை, வக்கீல் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நள்ளிரவில் அங்குவந்த மர்மநபர்கள் வணிகவளாகத்தின் மாடிப்படி கதவின் பூட்டை உடைத்தனர். பின்னர் படியேறி மாடிக்கு சென்ற அவர்கள் ஒவ்வொரு கடைகளின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். ஆனால் 5 கடைகளும் பணம் சிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த ரூ.4 ஆயிரத்தை மட்டும் மர்மநபர்கள் எடுத்துக்கொண்டனர். விளம்பர ஏஜென்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும், கடைகளில் உடைத்த பூட்டுகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து நேற்று காலை கடைக்காரர்கள் வந்து பார்த்தபோது கடைகளின் கதவு திறக்கப்பட்டு இருந்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஈரோடு கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளின் கதவுகள், பொருட்களில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பகலும், இரவும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு பெருந்துறை ரோட்டோரம் உள்ள வணிகவளாகத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story